எதிர்வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் பெரும்பான்மையான தொகுதிகளில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு அக்கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
அண்ணா அறிவாலயத்தில், ’உடன்பிறப்பே வா’ என்ற தலைப்பில் சட்டமன்றத் தொகுதி வாரியாக பகுதி, நகர, ஒன்றிய, பேரூர் கழகச் செயலாளர்கள் ஒவ்வொருவரையும் திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் தனித்தனியாக சந்திக்கும் நிகழ்வு கடந்த ஜூன் மாதம் 13ஆம் தேதி அன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்த சந்திப்பின்போது சட்டமன்றத் தொகுதிகளில் திமுக ஆட்சி குறித்த பொதுமக்களின் மனநிலை, இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை உள்ள எதிர்பார்ப்புகள் உள்ளிட்டவை குறித்து கேட்டறிந்து வருகிறார்.
மேலும் மாணவர்கள், பெண்கள், தொழிலாளர்கள் என அனைத்து தரப்பினருக்கும் அரசு செயல்படுத்தி வரும் சிறப்பான திட்டங்களையும், சாதனைகளையும் அவர்களிடம் எடுத்துச் சொல்லி அரசின் செயல்பாடுகளை விளக்க வேண்டும் எனவும் நிர்வாகிகளை ஸ்டாலின் அறிவுறுத்தி வருகிறார். இச்சந்திப்பின் போது, முன்வைக்கப்படும் கோரிக்கைகள் உடனடியாக அமைச்சர்களிடம் பேசித் தீர்வு காணப்படுவதோடு, மண்டல பொறுப்பாளர்கள் அனைத்து பிரச்சனைகளையும் கண்காணித்து அறிக்கை தர வேண்டும் என்றும் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இந்த நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற இன்றைய ’உடன்பிறப்பே வா’ நிகழ்வில் சூலூர், கிணத்துக்கடவு, மற்றும் வால்பாறை சட்டமன்ற தொகுதிகளை சேர்ந்த கட்சி நிர்வாகிகளை ஸ்டாலின் சந்தித்து பேசினார். அப்போது அவர், கோயம்புத்தூர் மாவட்டத்தில் பெரும்பான்மையான தொகுதிகளில் திமுக வெற்றி பெற வேண்டும் என்று, நிர்வாகிகள் முன்னிலையில் மண்டல பொறுப்பாளர் செந்தில் பாலாஜிக்கு உத்தரவிட்டார்.
கடந்த சட்டமன்ற தேர்தலின்போது கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளிலும் அதிமுகவே வென்றது. அதன் காரணமாக இம்முறை திமுக நிச்சயம் வெற்றி பெற வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் கண்டிப்பாக தெரிவித்துள்ளார். மேலும் அரசின் சாதனைகளை தொகுதி முழுக்கவும் விளம்பரப்படுத்த வேண்டும் என்றும், கலைஞர் உரிமைத்தொகை பெறாதவர்களில் தகுதியானவர்கள் இருப்பின் அவர்கள் உரிமைத்தொகை பெறும் வகையில் கட்சியினர் உதவிட வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார்.
அதேபோல் SIR பணிகளில் உள்ள குழப்பங்களால் லட்சக்கணக்கான வாக்காளர்கள் நீக்கப்படும் அபாயம் உள்ளதாகவும், வாக்காளர்களின் விவரங்களை சேகரிக்கும் பணிகளுக்கு திமுகவினர் மிகுந்த முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்றும் திமுக தவைவர் ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார்.
