2026 சட்டமன்றத் தேர்தலுக்கான விருப்ப மனுக்களை வாங்கும் பணி, அதிமுகவில் தீவிரமாக நடைபெறுகிறது.
2026 சட்டமன்றத் தேர்தலுக்கான பணியை அதிமுக தற்போதே தொடங்கி முழுவீச்சில் மேற்கொண்டு வருகிறது. கட்சி நிர்வாகிகளிடம் விருப்ப மனுக்களை வாங்கும் பணி, சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் விறுவிறுப்பாக நடைபெறுகிறது.
அதிமுக தலைமையக வளாகத்தில் இதற்காக பிரத்யேக இடம் ஏற்படுத்தப்பட்டு மனுக்கள் அளிக்கப்படுகின்றன. பிறகு அந்த மனுக்களை பூர்த்தி செய்து நிர்வாகிகள், சமர்பிக்க வலதுபுறத்தில் தனி இடம் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. அங்கு நிர்வாகிகள் விருப்ப மனுக்களை வாங்கி, சமர்பித்து வருகின்றனர்.
இன்று ராதாபுரம் தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்து முன்னாள் எம்பி செளந்தர ராஜன் மனுவை சமர்பித்தார். அப்போது அவருடன் முன்னாள் அமைச்சர் வி.எம்.ராஜலட்சுமி, அதிமுக அமைப்புச் செயலாளர் ஏ.கே.சீனிவாசன்,மாநில அம்மா பேரவை துணைச் செயலாளர் S.மைக்கேல் ராயப்பன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
இதேபோல், தமிழகம் முழுவதும் வந்திருந்த அதிமுகவினர் விருப்ப மனுக்களை பெற்று, சமர்ப்பித்தனர். இதனால் ராயப்பேட்டையில் அதிமுக தலைமையகம் அமைந்துள்ள பகுதியே மிகவும் பரபரப்பாக காணப்பட்டது.
