தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளுக்கு எத்தனை இடம் என்பதை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தான் முடிவு செய்வார் என பாஜக மாநில துணைத் தலைவர் கே.பி ராமலிங்கம் கூறியுள்ளார்.

சேலம் நெடுஞ்சாலை நகரில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமியை பாஜக மாநில துணைத்தலைவர் கே.பி.ராமலிங்கம் நேரில் சந்தித்து, மதுரையில் நடைபெற உள்ள முருக பக்தர்கள் மாநாட்டில் பங்கேற்க அழைப்பு விடுத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், முருக பக்தர்கள் மாநாட்டில் பங்கேற்க எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு விடுத்தோம் என்றார். தமிழகத்தின் மிகப்பெரிய திட்டமாக இருக்கக்கூடிய நடந்தாய் வாழி காவிரி என்ற திட்டம் காவிரி ஆற்றிலே வந்து கலக்கக்கூடிய கிளை நதிகளை அதே இடத்தில் சுத்தப்படுத்தி காவிரியில் கலக்க செய்ய வேண்டும். அதேபோல் பெருநகரங்களில் இருந்து வெளியேறும் கழிவு நீரை சுத்தப்படுத்தி காவிரி கலக்கச் செய்ய வேண்டும். இந்த திட்டத்திற்கான ஒட்டுமொத்த திட்ட மதிப்பு ரூ.11,900 கோடி. முதற்கட்டமாக இந்த திட்டத்திற்காக மத்திய அரசு 990 கோடி ரூபாய் மத்திய அரசு தற்போது ஒதுக்கியுள்ளது.

இது தொடர்பாக முதல் நிலையில் முதலில் மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்த எடப்பாடி பழனிசாமிக்கு விவசாயிகள் சங்கங்கள் சார்பில் நன்றி தெரிவிக்க வந்தேன். இது போன்ற மிகப்பெரிய திட்டங்களை எல்லாம் விவசாயிகளுக்காக தமிழகத்தில் அறிமுகப்படுத்திய நிலையில் உண்மையான விவசாயிகளை பச்சை துண்டு போட்டு ஏமாற்றுகிறார் ஸ்டாலின். காவேரி தூர் வாராத நிலையில் கடைமடைக்கு தண்ணீர் செல்லாதது அனைத்தும் உண்மை என்றார்.

பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் 78 இடங்கள் கேட்போம் என கூறியது குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு பதில் அளித்த கே.பி. ராமலிங்கம், தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவராக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளார். தேசிய ஜனநாயக கூட்டணியில் எந்த கட்சிக்கு, எத்தனை சீட் என்பதை அவர் தான் முடிவு செய்வார் என்று கூறினார்.

வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் ஆளும் திமுக அரசை தூக்கி எறிய வேண்டும் என்பதே அனைவரின் நோக்கமாக இருக்கிறது இந்த நோக்கத்தை நிறைவேற்றுவதில் பாரதிய ஜனதா கட்சி 100 சதவீதம் உறுதியாக உள்ளது. வரும் சட்டப்பேரவை தேர்தலில் கடுமையாக உழைத்து எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆட்சி அமைய கடுமையாக உழைப்போம் என்ற கேபி ராமலிங்கம் தமிழகத்தில் ஆட்சி அமைக்க வேண்டும் என்பது எல்லா கட்சிகளுக்கும் ஆசை உண்டு என்றும் ஒவ்வொரு கட்சியும் அதற்காக தான் உழைக்கிறார்கள் என்றும் கூறினார்.

Share.
Leave A Reply

Exit mobile version