புதுச்சேரியில் பாஜக-என்.ஆர்.காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. மீண்டும் இதே கூட்டணி தொடர பாஜக விருப்பம் காட்டும் நிலையில், என்.ஆர்.காங்கிரஸ் தலைவரும் முதலமைச்சருமான ரங்கசாமி அதற்கு இணக்கம் காட்ட மறுப்பதாக கூறப்படுகிறது.
இதற்கு இஸ்லாமியர், கிறிஸ்துவர்கள் உள்ளிட்ட சிறுபான்மையினர் ஓட்டு பாஜகவுக்கு இல்லை என்பதை காரணமாக கூறும் என்.ஆர்.காங்கிரஸ் தரப்பு, பாஜக சார்பில் போட்டியிட்ட உள்துறை அமைச்சர் நமச்சிவாயத்தின் தோல்வியை எடுத்துக்காட்டாக மேற்கோள் காட்டி வருகிறது. இதனிடையே, சில நாட்களுக்கு முன்பு தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தைக்கு வந்த பாஜக மேலிட பொறுப்பாளர் நிர்மல் குமார் சுரானாவுடன் முதலமைச்சர் ரங்கசாமி பிடி கொடுத்து பேசவில்லை என்றும் சொல்லப்படுகிறது.
அதே சமயம் துணைநிலை ஆளுநர், அதிகாரிகளால் அரசுக்கு தொடர்ந்து தொல்லை ஏற்படுவதாக அதிருப்தியை மட்டுமே வெளிப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. தொகுதிப் பங்கீடு குறித்து கேட்டதற்கு ஜனவரி மாதம் பார்த்துக் கொள்ளலாம் என்று சொல்லி நிர்மல் குமார் சுரானாவை ரங்கசாமி அனுப்பி வைத்ததாகவும் தகவல்கள் கூறுகின்றன.
மற்றொரு புறம் தவெக தலைவர் விஜய்யுடன் எப்பொழுதும் இணக்கம் காட்டும் முதலமைச்சர் ரங்கசாமி, அவரது ரோட் ஷோவுக்கு அனுமதி கொடுப்பது பற்றி 5 முறை ஆலோசனை நடத்தினார்.
பாதுகாப்பு காரணங்களால் அனுமதி தர முடியாமல் போனதால், பொதுக்கூட்டம் நடத்துவதற்கான ஆலோசனையை ரங்கசாமி வழங்கினார்.
கூட்டணி தொடர்பாக அண்மையில் தவெக நிர்வாகிகள் ஆனந்த், ஆதவ் அர்ஜூனாவுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் ஒரு தகவல் உள்ளது. புதுச்சேரி கூட்டத்தில் பாஜகவை விமர்சிக்கும் விஜய், ரங்கசாமியை விமர்சிக்க மாட்டார் என்று தவெக தரப்பில் கூறப்படுகிறது.
