2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் துரோகம் வீழ்த்தப்பட வேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவு நாளான இன்று (டிச.5) அவரது நினைவிடத்தில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மரியாதை செலுத்தி உறுதிமொழி எடுத்துக் கொண்டார்.
அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவரிடம், அதிமுகவை அமித் ஷா தான் இயக்குகிறாரா? என்ற கேள்விக்கு, ”அது பற்றி எனக்கு தெரியாது. அம்மாவின் தொண்டர்கள் தான் அதிமுகவை இயக்குகிறார்கள்” என்றார்.
திருப்பரங்குன்ற தீப விவகாரம் குறித்த கேள்விக்கு, ”அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்பது அம்மா வழியில் செயல்படக்கூடிய இயக்கம். அரசியலுக்காக மதத்தையும், சாதியையும் கையில் எடுக்கும் இயக்கமல்ல. இந்த விஷயத்தில் அங்குள்ள இந்து, இஸ்லாமிய மற்றும் கிறிஸ்தவ சமுதாய மக்கள் எல்லோரும் உறவினர்களாக, சகோதரர்களாக அமைதியாக வாழ்கின்ற விதத்திலும், பொது அமைதிக்கும், மத நல்லிணக்கத்திற்கும் இடையூறு வரும் வகையில் எந்த ஒரு அரசியல் கட்சியோ, அமைப்போ செயல்படகூடாது. அதுவே தமிழ்நாட்டு மக்களின் விருப்பம்.
தமிழ்நாடு மக்கள் சாதி மதங்களை எல்லாம் கடந்து எந்த ஒரு பேதம் இல்லாமல் சகோதர சகோதரிகளாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம். மதத்தின் பெயராலோ, சாதியின் பெயராலோ எந்த ஒரு இடைஞ்சலையும் யாரும் ஏற்படுத்துவதை தவிர்த்து விட வேண்டும். இது போன்ற அரசியலை தமிழ்நாட்டு மக்கள் உறுதியாக ஏற்க மாட்டார்கள். தொடர்ந்தது தமிழ்நாடு அமைதி பூங்காவாக திகழ வேண்டும் என்பதுதான் எங்களின் நிலைப்பாடு” என்றார்.
எங்களை பொருத்தவரை இந்த தேர்தலில் துரோகம் வீழ்த்தப்பட வேண்டும். இதில் அமமுகவின் பங்கு உறுதியாக இருக்கும். அதைத்தான் உறுதிமொழியாகவும் எடுத்து உள்ளோம்” என்றார்.
தே.ஜ., கூட்டணியில் மீண்டும் அமமுக இணையுமா? என்ற கேள்விக்கு, ”எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர் வேட்பாளராக தேசிய ஜனநாயக கூட்டணியில் இருக்கும் வரை இணைவதற்கு வாய்ப்பே இல்லை” என தெரிவித்தார்.
