தமிழக அரசியல் எத்தனையோ ஆளுமைகளை பார்த்துள்ளது. கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா போன்றவர்கள் திரைத்துறையில் இருந்து பரந்துபட்ட மக்கள் செல்வாக்குடன் அரசியலில் நுழைந்து அரியபல சாதனைகளை படைத்தவர்கள். கலைஞரின் வாரிசான தற்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் ஏறத்தாழ 50 ஆண்டுகள் நேரடி அரசியலில் புழங்கி மக்களிடம் நன்கு பரிச்சயம் ஆனவர்.
ஆனால் சாமான்ய தொண்டனாக இருந்து தமிழ்நாட்டின் முதலமைச்சர் பொறுப்பு வரை வகித்த பெருமை எடப்பாடி பழனிசாமியையே சாரும். இது அவருக்கான மிகைபுகழ்ச்சி அல்ல. 8 ஆண்டுகளுக்கு முன்புவரை தமிழ்நாட்டின் வெகுஜன மக்களிடையே எடப்பாடி பழனிசாமி யார் என்று கேட்டால் யாருக்கும் தெரியாது. இன்று யாருக்கும் தெரியாமல் இருக்க முடியாது. இந்த அசுர சாதனை வேறு யார் செய்திருக்க முடியும்?
மே 12 இன்று எடப்பாடி பழனிசாமியின் பிறந்தநாள். அவரது அரசியல் பயணத்தை சற்று திரும்பி பார்க்கும் போது, ஒரே துறையில் நீண்டகாலம் பயணித்தால் அதில் உச்சங்களை தொட முடியும் என்ற நம்பிக்கை பிறக்கிறது.
1954-ல் சேலம் மாவட்டம் எடப்பாடி அடுத்த சிலுவம்பாளையத்தில் பிறந்த பழனிசாமி, தனது 20-வது வயதில் அதாவது 1974-ல் அதிமுகவில் சேர்ந்தார். ஓரிரு மாதங்களிலேயே சிலுவம்பாளையத்தின் அதிமுக கிளைச்செயலாளராக தனது அரசியல் பயணத்தை ஆரம்பித்தார். வெல்லம் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த அவர் பிறகு படிப்படியாக முழுநேர அரசியலுக்குள் கவனம் செலுத்தத் தொடங்கினார்.
எம்ஜிஆர் மீது ஈர்ப்பு கொண்டு அதிமுகவில் சேர்ந்தபோதும் ஜெயலலிதா மீது தனிப்பற்றுக் கொண்டிருந்தார் எடப்பாடி பழனிசாமி. இதன் காரணமாகவே 1985-ல் எடப்பாடி ஒன்றியத்தில் ஜெயலலிதா பெயரில் தனிக்கொடி ஒன்றை உருவாக்கி அம்மா பேரவை என்று தொடங்கினார். எம்ஜிஆர் மறைவுக்குப் பிறகு அதிமுக இரண்டாக பிளவு கண்டபோது, ஜெயலலிதா பக்கம் நின்று தன் விசுவாசத்தைக் காட்டினார்.
அதனால் தான் 1989-ல் சேவல் சின்னத்தில் ஜெயலலிதா சார்பாக எடப்பாடி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு எம்எல்ஏவாக வெற்றி பெற்றார். அதிமுக ஒன்றிணைந்த பிறகு அவரது விசுவாசத்திற்கு பரிசாக 1990-ல் சேலம் வடக்கு மாவட்டச் செயலாளர் பொறுப்பைக் கொடுத்து அழகுபார்த்தார் ஜெயலலிதா.
1991 சட்டமன்ற தேர்தலில் எடப்பாடி தொகுதியில் அதிமுக சார்பில் களம்கண்டு எம்எல்ஏவாக வெற்றி பெற்றார் பழனிசாமி. கூடவே அதேகாலகட்டத்தில் சேலம் மாவட்ட திருக்கோயில்களின் வாரியத் தலைவர் பதவியும் அவரைத் தேடி வந்தது. 1996-ல் அதிமுகவுக்கு எதிராக பேரலை வீசியபோது அதில் மூழ்கிப் போனவர்களில் எடப்பாடி பழனிசாமியும் ஒருவர்.
ஆனால் துவண்டுபோகாமல் 1998-ல் திருச்செங்கோடு நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு எம்.பி.யாக நாடாளுமன்றத்திற்குள் கால்பதித்தார். 2001 சட்டமன்ற தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றபோது தமிழ்நாடு சிமெண்ட் கார்ப்பரேஷன் தலைவராக பணியாற்றினார்.
எடப்பாடி பழனிசாமியின் களப்பணியை பாராட்டி, 2006-ல் கொள்கை பரப்புச் செயலாளர் மற்றும் 2007-ல் அதிமுக அமைப்புச் செயலாளர் ஆகிய உயரிய பொறுப்புகளை வழங்கினார் ஜெயலலிதா.
2011 சட்டமன்ற தேர்தலில் மீண்டும் எடப்பாடி தொகுதியில் இருந்து சட்டமன்ற உறுப்பினராக தேர்வானார் பழனிசாமி. இந்த முறை நெடுஞ்சாலை மற்றும் சிறுதுறைமுகங்கள் துறையின் அமைச்சர் பொறுப்பும் அவர் வசமானது. கூடவே 2014-ல் அதிமுக தலைமை நிலையச் செயலாளர் மற்றும் சேலம் புறநகர் மாவட்டச் செயலாளர் என்ற கட்சிப் பதவிகளும் அவரைத் தேடி வந்தன.
2016 சட்டமன்ற தேர்தலில் தொடர்ந்து 2-வது முறையாக அதிமுக ஆட்சியைக் கைப்பற்றியபோது, எடப்பாடி தொகுதியை வழக்கம்போல் தக்க வைத்துக் கொண்டார் பழனிசாமி. இந்தமுறை பொதுப்பணித்துறை அமைச்சர் என்ற பெரும் பொறுப்பையும் அவருக்கு கொடுத்தார் ஜெயலலிதா.
ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் கட்சிக்குள் நடந்த களேபரங்களை தனது அரசியல் அனுபவத்தால் கையாண்ட எடப்பாடி பழனிசாமி, 2017 பிப்ரவரி 16-ந் தேதி தமிழ்நாட்டின் முதலமைச்சர் பதவியில் அமர்ந்தார். சாதாரண கிளைச்செயலாளராக கட்சியில் சேர்ந்து அந்த கட்சியின் தலைமை பீடத்திற்கு வருவதும், முதலமைச்சர் நாற்காலியில் அமர்வதும் திரைப்படங்களில் வேண்டுமானால் சாத்தியமாகலாம், நிஜத்தில் நடக்குமா? என்றவர்களுக்கு பதிலாக எழுந்து நின்றார் எடப்பாடி பழனிசாமி.
அடிப்படையில் வேளாண் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதால் தனது ஆட்சிக்காலத்தில் விவசாயிகளுக்கு ஏராளமான திட்டங்களை கொண்டு வந்தார். குடிமராமத்து அதில் முக்கியமானது. மேலும் காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்தது அவரது ஆட்சியில் குறிப்பிடத்தக்க சாதனையாகும். மேலும் 11 மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரிகளை திறந்தார். இதன்மூலம் தமிழ்நாட்டிற்கு கூடுதலாக 1650 மருத்துவ இடங்கள் கிடைத்தன. நீட் தேர்வால் அரசுப்பள்ளி மாணவர்கள், மருத்துவக் கல்வி பயில தடை ஏற்பட்டபோது, அரசுப் பள்ளியில் படித்த மாணவர்களுக்காக 7.5 சதவித இடஒதுக்கீட்டை கொண்டு வந்து கிராமப்புற மாணவர்களின் வாழ்வில் ஒளியேற்றினார்.
கஜா புயலை சிறப்பாக கையாண்டது, கொரோனா பெருந்தொற்றை எதிர்கொண்டது போன்ற சவால் மிகுந்த பணிகளையும் திறம்படி கையாண்டார் எடப்பாடி பழனிசாமி. ஆனாலும் 2021-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அதிமுக தோல்வியைத் தழுவியது. அப்போது முதல் தமிழக எதிர்க்கட்சித் தலைவராக சட்டமன்றத்தில் மக்கள் பிரச்னைகளுக்காக குரல் கொடுத்து வருகிறார் எடப்பாடி பழனிசாமி.
இதனிடையே கட்சிக்குள் ஒருங்கிணைப்பாளர் – இணை ஒருங்கிணைப்பாளர் போன்ற விவகாரங்களால் பிரச்னை ஏற்பட்டபோது துணிச்சலுடன் செயல்பட்டு புல்லுருவிகளை கட்சியை விட்டு நீக்கினார். 2022-ம் ஆண்டு ஜுலை மாதம் 11-ந் தேதி முதல் அதிமுகவின் பொதுச்செயலாளராக பணியாற்றி வருகிறார்.
2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைத்து தோல்வியைத் தழுவிய நிலையில், அந்த கூட்டணியை வெளிப்படையாக முறித்துக் கொண்டார். ஆனால் திமுக என்ற பொது எதிரியை வீழ்த்த 2026 சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு மீண்டும் பாஜகவுடன் கூட்டணி வைத்து அரசியல் கணக்கில் எதிர்பாராத நகர்வுகளை முன்னெடுக்கிறார்.
எனக்குப் பின்னாலும் அதிமுக நூறாண்டுகள் இருக்கும் என்ற ஜெயலலிதாவின் சொற்களை நனவாக்கும் வகையில் உட்கட்சி மோதல்களை சிறப்பாக கையாண்டும், தேசியக் கட்சியான பாஜகவை தேவையான அளவு பயன்படுத்தியும் அதிமுக என்ற கட்சிப் பெயரையும், அதன் இரட்டை இலை சின்னத்தையும் தக்க வைத்ததில் எடப்பாடி பழனிசாமிக்கு பெரும் பங்குண்டு.. வரலாற்றில் இதற்காகவே அவர் நினைவுகூரப்படுவார்.