உள்நோக்கத்துடன் குண்டர் தடுப்பு சட்டத்தை பிரயோகிக்கும் காவல்துறை அதிகாரிகள் மீது, துறை ரீதியான நடவடிக்கை எடுக்கும்படி, தமிழக அரசுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வாடகை வீட்டை காலி செய்ய மறுத்ததுடன், ஆபாசமாக திட்டியதாக அமீனால் பீவி என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில், யு டியூபர் வாராகிக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட வாராகியை, குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கும்படி, சென்னை மாநகர காவல் ஆணையர், டிசம்பர் 3ம் தேதி உத்தரவு பிறப்பித்திதுந்தார்.
இந்த உத்தரவை எதிர்த்து, வாராகியின் மனைவி நீலிமா, தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு, நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், பி.தனபால் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், காவல் துறைக்கு எதிராக கருத்து தெரிவித்ததால் தனது கணவருக்கு எதிராக குண்டர் தடுப்பு சட்டம் பயன்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
அரசு தரப்பில், மனுவுக்கு விரிவாக பதிலளிக்க அவகாசம் வழங்க வேண்டும் என கோரப்பட்டது. இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், அரசு துறைகள் மற்றும் அதிகாரிகளுக்கு எதிராக எதிர் கருத்து தெரிவித்ததற்காக, குண்டர் தடுப்பு சட்டத்தின் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகக் கூறி, வாராகிக்கு 3 மாதங்கள் இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டனர்.
மேலும், உள்நோக்கத்துடன், இயந்திரத்தனமாக குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைத்து உத்தரவை பிறப்பிக்கும் காவல்துறை அதிகாரிகள் மீது, துறை ரீதியாக ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தமிழக அரசின் உள்துறை செயலருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும் இந்த மனுவுக்கு 12 வாரங்களுக்குள், பதிலளிக்க காவல் துறைக்கு உத்தரவிட்டு விசாரணையை நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.
