மதுபோதையில் காரை ஓட்டிச் சென்று நடைபாதையில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது ஏற்றியதில், 12 வயது சிறுவன் பலியான வழக்கில்தொழிலதிபர் ஷாஜி புருஷோத்தமனுக்கு  மீண்டும் பிடிவாரண்ட் பிறப்பித்து சென்னை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 கடந்த 2013 மே 22ஆம் தேதிசென்னை எழும்பூா் பாந்தியன் சாலையில் நடைபாதையில் தூங்கிக் கொண்டிருந்தவா்கள் மீது மதுபோதையில் சொகுசு காரை ஏற்றியதில், 12 வயது சிறுவன் உயிரிழந்தது தொடர்பான வழக்கில், EMPEE குழுமத்தின் தலைவா் எம்.என்.புருஷோத்தமனின் மகன் ஷாஜி புருஷோத்தமனை குற்றவாளி என அறிவித்து, சென்னை 7வது கூடுதல் அமா்வு நீதிமன்ற நீதிபதி பி.ஸ்ரீகுமாா் தீர்ப்பளித்திருந்தார்.

அன்றைய தினம், ஷாஜி நீதிமன்றத்தில் ஆஜராகாததால், அவருக்கு எதிராக வாரண்ட் பிறப்பித்தும்  உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில், பிடிவாரண்ட்டை  எதிர்த்து  ஷாஜி புருஷோத்தமன் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், பிடி வாரண்ட்டை திரும்பப் பெற்றதுடன், விசாரணை நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு, அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, முதுகு தண்டுவட பிரச்னையால் பாதிக்கப்பட்டுள்ளதால், நேரில் ஆஜராவதில் இருந்து விலக்களிக்க கோரியும், காணொளி காட்சி மூலம் ஆஜராக அனுமதி கோரியும் ஷாஜி தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. மேலும், உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இந்த மனுக்களை அமர்வு நீதிமன்றம், உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும் ஆஜராகாததால், விலக்களிக்க முடியாது என கூறி, அந்த மனுவை தள்ளுபடி செய்தது.

தண்டனை விவரங்கள் அறிவிக்க குற்றம் சாட்டப்பட்டவர் கட்டாயம் நேரில் ஆஜராக வேண்டும் என்பதால்,  காணொலி காட்சி மூலம் ஆஜராக அனுமதி கோரிய மனுவை ஏற்க முடியாது என தள்ளுபடி செய்த அமர்வு நீதிமன்ற நீதிபதி, ஷாஜி புருஷோத்தமனை கைது செய்து ஆஜர்படுத்தும் வகையில், அவருக்கு எதிராக பிடி வாரண்ட் பிறப்பித்து, விசாரணையை ஜூலை 30 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version