காராஷ்டிராவில் சிவசேனா மற்றும் தேசியவாத காங்கிரஸ் (NCP) ஆகிய பிராந்திய கட்சிகளை உடைத்து, ஆட்சியைப் பிடித்த பாஜகவின் அதே ‘சதுரங்க வேட்டை’ வியூகம், தற்போது மேற்குவங்கத்திலும் அரங்கேறத் தொடங்கியுள்ளதாக அம்மாநில அரசியல் வட்டாரம் பரபரத்து கிடக்கிறது.

கடந்த மாதம் நடைபெற்ற மேற்குவங்க சட்டமன்றத் தேர்தலில் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஆட்சியை இழந்து, சுவேந்து அதிகாரி தலைமையில் பாஜக புதிய ஆட்சியை அமைத்தது. தேர்தல் தோல்வியின் அதிர்ச்சியிலிருந்து திரிணாமுல் காங்கிரஸ் மீள்வதற்குள்ளாகவே, அக்கட்சி தற்போது வரலாறுகாணாத பிளவை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. மம்தா பானர்ஜிக்கு எதிராக அவரது சொந்தக் கட்சி எம்.எல்.ஏ-க்களே போர்க்கொடி தூக்கியுள்ள சூழலில், இதன் பின்னணியில் டெல்லி பாஜகவின் ‘மகாராஷ்டிரா மாடல்’ திரைமறைவு வேலைகள் இருப்பதாக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு தொற்றியுள்ளது.

மம்தாவுக்கு எதிராக திரண்ட எம்.எல்.ஏ-க்கள்

இந்த அரசியல் பூகம்பத்தின் தொடக்கமாக, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் சட்டமன்றக் குழுத் தலைவர் பதவிக்கான கடிதத்தில் தங்களது கையெழுத்துக்கள் போலியாகப் போடப்பட்டுள்ளதாக எம்.எல்.ஏ-க்கள் ரிதாப்ரதா பானர்ஜி மற்றும் சந்திபன் சாகா ஆகியோர் குற்றம் சாட்டினர். இதனைத் தொடர்ந்து அவர்கள் இருவரும் கட்சியிலிருந்து உடனடியாக நீக்கப்பட்டனர். ஆனால், இந்த அதிரடி நடவடிக்கை மம்தாவுக்குச் சாதகமாக அமையாமல், அவருக்கு எதிரான பெரும் முட்டலாக மாறியுள்ளது. நீக்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே, ரிதாப்ரதா பானர்ஜி, கட்சியின் 80 எம்.எல்.ஏ-க்களில் 59 பேரின் ஆதரவைத் தன் பக்கம் திரட்டி, மேற்குவங்க சட்டமன்ற சபாநாயகர் ரதீந்திர போஸை நேரில் சந்தித்துத் தங்களுக்குத்தான் பெரும்பான்மை உள்ளது என்று அதிரடி காட்டினார். மம்தா பானர்ஜி, கட்சியின் மூத்த தலைவர் சோவன்தேவ் சட்டோபாத்யாயாவை எதிர்க்கட்சித் தலைவராக அறிவித்திருந்த நிலையில், எதிர்தரப்பு எம்.எல்.ஏ-க்களின் கோரிக்கையை ஏற்று ரிதாப்ரதா பானர்ஜியை புதிய எதிர்க்கட்சித் தலைவராக அங்கீகரித்து, அவருக்கான அறையின் சாவியையும் ஒப்படைத்துள்ளார் சபாநாயகர்.

பாஜகவின் ‘ஆபரேஷன் லோட்டஸ்’ வியூகம்

இந்திய அரசியல் வரலாற்றில், தேர்ந்தெடுக்கப்பட்ட எதிர்க்கட்சி அரசாங்கங்களை அல்லது வலுவான பிராந்திய கட்சிகளைத் தங்களுக்குச் சாதகமாக உடைப்பதில் பாஜக தொடர்ந்து ஒரே மாதிரியான உத்திகளைக் கையாண்டு வருகிறது. இதற்கு மிகச்சிறந்த உதாரணம், மகாராஷ்டிராவில் அரங்கேறிய அரசியல் கூத்துகளாகும். சிவசேனா கட்சியின் மூத்த தலைவராக இருந்த ஏக்நாத் ஷிண்டேவை முன்னிறுத்தி, உத்தவ் தாக்கரேவின் தலைமையிலான மகா விகாஸ் அகாடி அரசுக்கு எதிராகப் பிளவை ஏற்படுத்தியது பாஜக. கட்சித் தாவல் தடைச் சட்டத்தில் இருந்து தப்பிக்க ஏக்நாத் ஷிண்டேவுக்குப் பெரும்பான்மை எம்.எல்.ஏ-க்களின் ஆதரவை ரகசியமாகத் திரட்டித் தந்து, இறுதியில் கட்சியின் பெயரையும், ‘வில் அம்பு’ சின்னத்தையும் தேர்தல் ஆணையம் மூலம் ஷிண்டே தரப்பிற்கே பெற்றுத் தந்ததாக உத்தவ் தாக்கரே குற்றம்சாட்டி இருந்தார்.

இதேபோல், தேசியவாத காங்கிரஸ் கட்சியிலும் சரத் பவாரின் தம்பியான அஜித் பவாரைக் கொண்டு வந்து, கட்சியின் ஒட்டுமொத்தப் பெரும்பான்மையைக் கைப்பற்றி, சரத் பவாரையே ஓரங்கட்டியது பாஜக. மத்தியப் பிரதேசத்தில் ஜோதிர்ஆதித்ய சிந்தியா மூலம் காங்கிரஸ் ஆட்சியைக் கவிழ்த்தது முதல், கர்நாடகாவில் ‘ஆபரேஷன் லோட்டஸ்’ மூலம் மதச்சார்பற்ற ஜனதா தளம் – காங்கிரஸ் கூட்டணியை உடைத்தது வரை, பாஜகவின் உத்தி என்பது ஒன்றுதான். அமலாக்கத்துறை, சிபிஐ அல்லது போலீஸ் போன்ற மத்திய அமைப்புகளின் அழுத்தங்களைப் பயன்படுத்தி, அதிருப்தி தலைவர்களைத் தங்கள் வசம் இழுப்பது, பின்னர் சட்டத்தின் ஓட்டைகளைப் பயன்படுத்தி ஒட்டுமொத்தக் கட்சியையும் சின்னத்தையும் அபகரிப்பது.

மேற்கு வங்காளத்திலும் அதே உத்தி?

மேற்குவங்கத்திலும் இதே ‘மகாராஷ்டிரா மாடல்’ தான் தற்போது நகலெடுக்கப்படுகிறது என்று மம்தா பானர்ஜியின் விசுவாசிகளான குணால் கோஷ் மற்றும் மதன் மித்ரா ஆகியோர் குற்றம் சாட்டுகின்றனர். எம்.எல்.ஏ-க்கள் தங்கும் விடுதிகளிலும், தனியார் விடுதிகளிலும் ரகசியக் கூட்டங்கள் நடத்தப்பட்டு, மம்தாவின் கையை மீறி கட்சி பிளவுபட்டுள்ளது. இந்த விவகாரம் குறித்துப் பேசியுள்ள மம்தா பானர்ஜி, “நமது எம்.எல்.ஏ-க்கள் தங்களின் வீடுகளை விட்டு வெளியே வர அனுமதிக்கப்படுவதில்லை; காவல்துறையினர் அவர்களைத் திரிணாமுல் காங்கிரஸை விட்டு வெளியேறி, புதிய கட்சியைத் தொடங்குமாறு வற்புறுத்துகின்றனர். டெல்லியில் இருந்து இயக்கப்படும் இந்தச் சதியை நாங்கள் முறியடிப்போம்” என்று பா.ஜ.க மீது நேரடியாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

தேர்தல் தோல்விக்குப் பிறகு மம்தாவின் இல்லத்தில் நடைபெற்ற கூட்டங்களில் எம்.எல்.ஏ-க்களின் வருகை படிப்படியாகக் குறைந்து (71-லிருந்து வெறும் 20 எம்.எல்.ஏ-க்கள் மட்டுமே பங்கேற்பு), தற்போது 60 எம்.எல்.ஏ-க்கள் மம்தாவை ‘வழிகாட்டியாக’ மட்டுமே இருக்கச் சொல்லிவிட்டு, தங்களைத் தனிப் பிரிவாக அறிவித்துக் கொண்டுள்ளனர். கட்சித் தாவல் தடைச் சட்டத்தின்படி 80 பேரில் 53 பேரின் ஆதரவு இருந்தால் தப்பித்துவிடலாம் என்பதால், 59 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவோடு ரிதாப்ரதா பானர்ஜி காய் நகர்த்துகிறார். மொத்தத்தில், மம்தா பானர்ஜியின் அரசியல் சாம்ராஜ்யத்தை வேரறுக்க, பாஜக தனது பழைய அஸ்திரத்தைக் கையில் எடுத்ததன் விளைவாக, தற்போது திரிணாமுல் காங்கிரஸ் தட்டையாகப் பிளந்து நிற்கிறது.இதனால், வரவிருக்கும் நாட்களில் மேற்குவங்கத்தில் அரசியல் பரபரப்புகளுக்குப் பஞ்சம் இருக்காது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version