தமிழக சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், பல்வேறு ஊடகங்கள் வெளியிட்ட தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகளை எல்லாம் தவிடு பொடியாக்கி நடிகர் விஜய்யின் தவெக பெரும்பான்மை இடத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. பகல் 11 மணி நிலவரப்படி தவெக 104 இடங்களிலும், அதிமுக 75 மற்றும் திமுக 54 இடங்களிலும் முன்னணியில் உள்ளன. இதே நிலை தொடருமானால் தமிழ்நாட்டில் ஆட்சி அமைப்பதற்குத் தேவையான 118 இடங்களைப் பெறுவது என்பது இயலாத காரியமாகி விடும். இதனால் தமிழ்நாட்டில் தொங்கு சட்டசபை ஏற்படும் நிலை நிலவுகிறது.
இதனைச் சமாளிக்கும் வகையில் தற்போதே தவெகவில் இருந்து பல்வேறு கட்சிகளுடன் மறைமுகப் பேச்சுவார்த்தை தொடங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
தவெக முதன்மை நிர்வாகி ஆதவ் அர்ஜுனா மூலம் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளிடம் ஆதரவு தரக் கோரி பேச்சுவார்த்தையைத் தொடங்கி இருப்பதாக தவெக வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது. ஏற்கனவே திமுகவுடன் காங்கிரஸ் தனது கூட்டணியை இறுதிப்படுத்தும் வரை அது தவெகவுடன் தான் கூட்டணி வைக்கும் எனப் பேசப்பட்டது குறிப்பிடத் தக்கது.
இதே போல், மற்றொரு தவெக முதன்மை நிர்வாகி செங்கோட்டையன் மூலமாக கொங்குமண்டலத்தில் வெற்றிபெறும் அதிமுக எம்.எல்.ஏக்களிடம் ஆதரவு கேட்டு தூதுவிடப்படுவதாகவும் அரசியல் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது.
எப்படியாவது தவெகவின் ஆட்சியை தமிழ்நாட்டில் அமைத்து விடவேண்டும் என முனைப்பு காட்டும் விஜய், இதற்காக குதிரைப்பேரத்தில் இறங்கி இருப்பதாகவும் அரசியல் வட்டாரத்தில் அனலடிக்கிறது.
