முதலமைச்சரிடம் கேட்டு வாரத்தில் 5 நாட்களிலும் உடற்கல்வி வகுப்பு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்.
சென்னை எழும்பூரில் உள்ள மாநில அரசு மகளிர் மேல்நிலை பள்ளியில், ஹூண்டாய் மொபிஸ் நிறுவனத்தின் சார்பில் மாணவர்களின் பயன்பாட்டுக்காக பெஞ்ச் டெஸ்க் வழங்கும் விழா நடைபெற்றது. இந்நிகழ்வில் பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, பள்ளிக்கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் ராஜ்மோகன் ஆகியோர் கலந்து கொண்டனர். குறிப்பாக ஹூண்டாய் மொபிஸ் நிறுவனத்தின் சமூகப் பொறுப்புத் திட்டத்தின் கீழ் மொத்தம் 18 பள்ளிகளுக்கு, 70 லட்சம் மதிப்பில் 900 இருக்கைகள் (bench-desk) மாணவர்களின் பயன்பாட்டிற்காக வழங்கப்பட்டன.
பின்னர் நிகழ்ச்சியில் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன், தமிழகம் முழுவதும் 7 கோடி ரூபாய்க்கு ஹூண்டாய் நிறுவனம் கல்வி உபகரணங்களை வழங்கி உள்ளது என்றார். மேலும் மாணவிகள் தன்னம்பிக்கையை வளர்த்து கொண்டால், வாழ்க்கையில் நினைத்ததை அடைய முடியும் என்று கூறிய அமைச்சர், மாணவர்கள் தலைமை பண்பினை வளர்த்துக்கொள்ள வேண்டும் எனக் கூறினார்.
அதன் பின்னர் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசியதாவது…
நானும் அரசு பள்ளியில், தமிழ் வழி கல்வியில் படித்தவன் தான். அதற்கு நான் பெருமை கொள்கிறேன். நான் சோகமாக இருக்கும் போது, எனது ஆசிரியர்கள் தலைவர்களின் புத்தகங்களை எனக்கு வழங்கினர். முதலில் நான் அப்படி படித்தது பேரறிஞர் அண்ணா புத்தகம் தான்.
சால்வை போடுவதற்கு பதிலாக புத்தகம் கொடுக்க வேண்டும். அவ்வாறு இந்த 60 நாளில் 2000க்கும் மேற்பட்ட புத்தகங்கள் எனக்கு வந்துள்ளன.
நான் படித்த காலத்தில், பள்ளியில் முறையான கழிப்பறை வசதி, வகுப்பறைகள் கூட இருந்தது இல்லை. அதேபோல் 11, 12ஆம் வகுப்புகளை நான் மரத்தடியில் தான் படித்தேன்.
ஆனால் தற்போது உள்ள பள்ளி கல்வித்துறை அமைச்சர், மாணவர்கள் நலனை உணர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறார் . முதலமைச்சர் விஜயின் நோக்கம், அரசு பள்ளிகளை வளர்ச்சி அடைய வேண்டும் என்பது தான். பொதுப்பணித்துறை ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்ற போது, அரசு பள்ளிகள், மருத்துவமனைகளை உலக தரத்திற்கு உயர்த்த வேண்டும் என முதலமைச்சர் ஆலோசனை வழங்கினார்.
கல்வி, விளையாட்டு ஆகியவற்றை சர்வதேச தரத்துக்கு சமமாக உயர்த்த வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் அரசுத்துறை பட்ஜெட்டில் ஒதுக்கப்படுகிறது அதை முறையாக பயன் படுத்தவில்லை.
அமைச்சர்கள் தங்கள் குழந்தைகளை தனியார் கல்லூரிகளில் சேர்த்தது பிரச்சனை இல்லை ஆனால் ஒவ்வொரு அமைச்சரும் தனியார் கல்லூரி மற்றும் பள்ளிக்கூடங்களை வைத்துள்ளனர் அதுதான் பிரச்சனை.
கடந்த 50 ஆண்டுகளில் தனியார் பள்ளிகளுக்கும் அரசு பள்ளிக்கும் ஏராளமான வேறுபாடுகள் இருக்கின்றன .அரசு பள்ளி மாணவர்களுக்கும் தனியார் பள்ளிக்கு நிகரான கல்வி கிடைக்க அனைத்து நடவடிக்கையையும் எடுக்கப்படும் . உலக தரம் வாய்ந்த அரசு பள்ளிகளை முதலமைச்சர் உருவாக்குவார்.
முதலமைச்சரை கீழே அமுக்க பார்த்தார்கள், ஆனால் இன்றைக்கு அதை உடைத்து முதலமைச்சர் மேலே வந்துள்ளார். வரலாற்றை மக்கள் உருவாக்கினர். எனது பலம் விளையாட்டும் அரசியலும் தான். என்னை உருவாக்கியது அரசு தான். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கொடுத்த ஸ்போர்ட்ஸ் கோட்டாவில் தான் படித்து வந்தேன்.
வாரம் முழுவதும் உடற்கல்வி வகுப்பு நடத்த வேண்டும் என, அமைச்சர் முதலமைச்சரிடம் இதுகுறித்து பேசவேண்டும். தமிழ்நாடு முழுதும் ஸ்போர்ட்ஸை சமமாக கொண்டு செல்ல வேண்டும். முதலமைச்சரிடம் கேட்டு வாரத்தில் 5 நாட்களிலும் உடற்கல்வி வகுப்பு இருக்க வேண்டும். உடற்பயிற்சி ஆசிரியர்களை வைத்து அரசு பள்ளி மாணவர்களை ஒலிப்பிக்கில் ஓட வைக்க போகின்றோம். வாரத்தில் ஐந்து நாட்களும் தமிழ்நாடு முழுவதும் உடற்கல்வி வகுப்பு கொண்டுவர வேண்டும்.
இவ்வாறு ஆதவ் அர்ஜுனா பேசினார்.
