தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநர், நடிகர், திரைக்கதை எழுத்தாளர் மற்றும் நகைச்சுவை பாணியில் தனித்துவம் பெற்றவர் எனப் பெயர் பெற்ற கே. பாக்யராஜ், 73-வது வயதில் மாரடைப்பு காரணமாக சென்னையில் உள்ள தனது இல்லத்தில் இன்று காலமானார்.

தமிழ் சினிமாவில் திரைக்கதை அமைப்பில் புதிய பாணியை உருவாக்கிய முக்கியமான படைப்பாளிகளில் ஒருவராகக் கருதப்படும் இவர், குடும்ப வாழ்க்கை சார்ந்த கதைகள் மற்றும் சமூக நையாண்டி கூறுகளைக் கலந்த திரைப்படங்களால் ரசிகர்களிடையே தனித்த இடத்தைப் பெற்றவர். ஒரு சாதாரண கதையையும் சுவாரசியமான திருப்பங்களுடன், நகைச்சுவை மற்றும் உணர்ச்சிகளைச் சேர்த்து சொல்லும் அவரது தனித்துவமான திரைக்கதை பாணி பெரும் வரவேற்பைப் பெற்றது. ‘முந்தானை முடிச்சு’, ‘மௌன கீதங்கள்’, ‘தூறல் நின்னு போச்சு’, ‘அந்த 7 நாட்கள்’ உள்ளிட்ட அவரது படைப்புகள் தமிழ் சினிமாவில் முக்கியமான படங்களாகக் கருதப்படுகின்றன. இவ்வாறான படங்கள் இன்றும் திரைக்கதை எழுதும் இயக்குநர்களுக்கு ஒரு பாடமாக உள்ளன.

தமிழ் திரைப்பட உலகில் வணிகரீதியாகவும், கலைநயத்துடனும் படங்களை உருவாக்க முடியும் என்பதை நிரூபித்த முன்னோடிகளில் ஒருவராகக் கருதப்படுகிறார். அவரது படைப்புகள் மற்றும் பங்களிப்பு தமிழ் சினிமா வரலாற்றில் நீங்காத இடத்தைப் பெற்றிருக்கும் என திரையுலகினர் கருத்து தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் பாக்யராஜ் மறைவிற்கு திரையுலகினர், அரசியல் பிரமுகர்கள் என பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தனது எக்ஸ் பக்கத்தில், பிரபல திரைப்பட இயக்குனர், திரைக்கதை ஆசிரியர், நடிகர், இசையமைப்பாளர் என பன்முகத் திறமையாளராக விளங்கிய பாக்யராஜ் காலமானார் என்ற செய்தி அறிந்து மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். மாண்புமிகு புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்கள் மீது பேரன்பு கொண்டிருந்தவர் மறைந்த திரு. பாக்யராஜ் அவர்கள். “அண்ணா நீ என் தெய்வம்” என்ற புரட்சித் தலைவர் அவர்களின் முடிவுறாத படத்தின் காட்சிகளை வைத்து, அதற்கேற்ப ஒரு புதிய திரைக்கதை அமைத்து, “அவசர போலீஸ் 100” என்ற படமாக எடுத்து அதில் வெற்றியும் கண்டார். இந்திய திரையுலகின் தன்னிகரற்ற திரைக்கதை ஆசிரியர் என்ற பெருமைக்குரிய அவர்தம் மறைவு என்பது ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் அவர்தம் குடும்பதாருக்கும், திரைத் துறையினருக்கும், ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். மறைந்த அவர்தம் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன், என்று பதிவிட்டுள்ளார்.

இதேபோல் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் பக்கத்தில், தமிழ் திரையுலகின் “திரைக்கதை மன்னன்” என்று போற்றப்பட்ட இயக்குநர் பாக்யராஜ் இன்று காலமானார் என்ற செய்தி என்னை மிகுந்த துயரத்திலும் ஆழ்ந்த வேதனையிலும் ஆழ்த்தியுள்ளது. ஒரு திரைப்படத்தின் திரைக்கதை எவ்வாறு அமைக்கப்பட வேண்டும் என்பதற்கு அவரது படைப்புகள் இன்றளவும் சிறந்த பாடமாக விளங்கி வருகின்றன. எளிமையான கதை, நகைச்சுவை, குடும்ப உணர்வுகள் மற்றும் விறுவிறுப்பான திரைக்கதை ஆகியவற்றை தனக்கே உரிய பாணியில் இணைத்து, தமிழ் சினிமாவிற்கு எண்ணற்ற காலத்தால் அழியாத படைப்புகளை அவர் வழங்கியுள்ளார். அவரது திரைப்படங்கள் என்றும் தமிழ் சினிமா ரசிகர்களின் மனங்களில் நிலைத்து நிற்கும். அவரது கலைப் பயணமும், சாதனைகளும் வருங்கால இயக்குநர்களுக்கும் திரைக்கதை ஆசிரியர்களுக்கும் என்றும் ஒரு வழிகாட்டியாக இருக்கும். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், திரையுலகினருக்கும், ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன், என்று தெரிவித்துள்ளார்.

 

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version