இந்தியாவில் தொகுதி மறுவரையரை விவகாரம் மீண்டும் தேசிய அரசியலின் மையக்கட்டத்திற்கு வந்துள்ளது. மக்களவை மற்றும் சட்டமன்றத் தொகுதிகளின் எல்லைகளை வரையறுக்கும் இந்த நடைமுறை, மக்கள்தொகை மாற்றங்களுக்கு ஏற்ப தொகுதிகளின் பிரதிநிதித்துவத்தைச் சமநிலையில் வைத்திருப்பதை நோக்கமாகக் கொண்டது.
தொகுதி மறுவரையரை என்றால் என்ன? மக்களவை மற்றும் மாநில சட்டமன்றங்களுக்கான தொகுதிகளின் எல்லைகளை நிர்ணயிப்பது அல்லது மாற்றி அமைப்பதுதான் தொகுதி மறுவரையரை எனப்படும். தனிப்பட்ட தொகுதிகளின் மக்கள்தொகைக்கும் அவற்றுக்கான அரசியல் பிரதிநிதித்துவத்திற்கும் இடையே பெரிய இடைவெளி இருக்கக் கூடாது என்பதை உறுதி செய்வதே இதன் முக்கிய நோக்கங்களில் ஒன்றாகும்.
இந்த மறுவரையரையின் போதுதான், பட்டியல் சாதியினர் (SC) மற்றும் பட்டியல் பழங்குடியினருக்கு (ST) எத்தனை இடங்கள் ஒதுக்கப்பட வேண்டும் என்பதும் தீர்மானிக்கப்படுகிறது. இந்தியாவில் நாடாளுமன்றத்தால் இயற்றப்பட்ட சட்டத்தின்படி உருவாக்கப்பட்ட சக்திவாய்ந்த அமைப்பான ‘தொகுதி மறுவரையரை ஆணையம்’ இந்தப் பணியைச் செய்கிறது. தேர்தல் ஆணையத்தின்படி, இந்த ஆணையத்தின் உத்தரவுகள் சட்டத்திற்கு இணையான பல அதைக் நீதிமன்றத்தில் எதிர்த்து கேள்வி கேட்பதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு.
தென்மாநிலங்கள் ஏன் கவலை கொள்ள வேண்டும்? மக்கள் தொகைக்கும் அரசியல் பிரதிநிதித்துவத்திற்கும் இடையிலான தொடர்பே தென்மாநிலங்களின் முக்கிய அச்சத்திற்குக் காரணமாகும். கல்வி, சுகாதாரம் மற்றும் குடும்பக் கட்டுப்பாடு போன்ற காரணிகளால் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா மற்றும் தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் கருத்தரிப்பு விகிதமும் மக்கள்தொகை வளர்ச்சியும் கடந்த தசாப்தங்களில் குறைந்துள்ளன.
மறுபுறம், வட இந்திய மாநிலங்களில் மக்கள்தொகை வளர்ச்சி ஒப்பீட்டளவில் வேகமாக இருந்தது. இதனால், தற்போதைய மக்கள்தொகை விகிதாச்சாரத்தின்படி மக்களவைத் தொகுதிகள் மாற்றப்பட்டால், குடும்பக் கட்டுப்பாட்டில் சிறப்பாகச் செயல்பட்டதற்காக தங்களின் அரசியல் செல்வாக்கு குறையக்கூடும் என்று தென்மாநில அரசியல்வாதிகள் அஞ்சுகின்றனர்.
இதற்கிடையே, மத்திய அரசு மாற்று மதிப்பீட்டை முன்வைத்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மக்களவை இடங்களை 543-ல் இருந்து 816 ஆக உயர்த்துவதன் மூலம், தென்மாநிலங்களின் இடங்கள் 129-லிருந்து 195 ஆக அதிகரிக்கும் என்றும், மொத்த அவையில் அவற்றின் பங்கு சுமார் 24% ஆகத் தொடரும் என்றும் தெரிவித்திருந்தார்.
மக்கள்தொகை வளர்ச்சி என்ன தாக்கத்தை ஏற்படுத்தும்? கடந்த தசாப்தங்களில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களின் மக்கள்தொகை ஒரே சீராக வளரவில்லை. உ.பி., பீகார், ம.பி., ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் தென்மாநிலங்களை விட மக்கள்தொகை அதிகம் அதிகரித்துள்ளது. மாநிலங்களுக்கு இடையேயான மக்கள்தொகைக்கு ஏற்ப இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டால், அதிக மக்கள்தொகை கொண்ட மாநிலங்களின் இடங்கள் அதிகரிக்கலாம்.
குறைந்த மக்கள்தொகை வளர்ச்சி கொண்ட மாநிலங்களில் இடங்களின் அதிகரிப்பு மெதுவாக இருக்கலாம், இது மக்களவையில் அவற்றின் ஒட்டுமொத்தப் பங்கு குறைய வழிவகுக்கும். இருப்பினும், இதன் உண்மையான தாக்கம் எதிர்கால மறுவரையரைக்குத் தேர்ந்தெடுக்கப்படும் ஃபார்முலா மற்றும் மொத்த மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையைப் பொறுத்தே அமையும்.
அடுத்த தொகுதி மறுவரையரை எப்போது நடைபெறும்? 1971-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் மக்களவையில் மாநிலங்களுக்கு ஒதுக்கப்படும் இடங்களின் எண்ணிக்கை நீண்ட காலமாக மாற்றமின்றி வைக்கப்பட்டுள்ளது. 84 மற்றும் 87-வது அரசியலமைப்புத் திருத்தங்களுக்குப் பிறகு, 2026-க்குப் பிந்தைய முதல் மக்கள் தொகை கணக்கெடுப்புத் தரவுகள் வெளியாகும் வரை இடங்கள் மாற்றப்படாமல் இருக்கும் எனத் தேர்தல் ஆணையம் தெரிவித்தது.
இதனை முன்னெடுத்துச் செல்ல 2026-ல் மத்திய அரசு மசோதாவைத் தாக்கல் செய்தாலும், மக்களவையில் தேவையான சிறப்புப் பெரும்பான்மை கிடைக்காததால் அது திரும்பப் பெறப்பட்டது. அதாவது ஏப்ரல் 2026-ல் பரிந்துரைக்கப்பட்ட செய்யப்பட்ட விதிகள் இன்னும் சட்டமாகவில்லை.
தென்மாநிலங்கள் என்ன செய்கின்றன? தொகுதி மறுவரையரையால் ஏற்படும் தாக்கம் குறித்து தென்மாநிலத் தலைவர்கள் நீண்டகாலமாகவே கவலை தெரிவித்து வருகின்றனர். தமிழ்நாட்டில் இது பெரும் விவாதமாகியுள்ளது. இது தொடர்பாக நேற்று முதலமைச்சர் விஜய் எம்பிக்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தினார்.
மக்கள்தொகை கட்டுப்பாட்டில் வெற்றி பெற்ற மாநிலங்கள் எதிர்காலத்தில் நாடாளுமன்றத்தில் தங்கள் மொத்த இடங்களின் பங்கை இழந்தால், அது அவர்களின் வெற்றிக்கு வழங்கப்படும் தண்டனை போன்றது அல்லவா என்பதே தென்மாநிலங்களின் முக்கியக் கேள்வியாக உள்ளது. மறுபுறம், மொத்த இடங்கள் கணிசமாக உயர்த்தப்பட்டால் தென்மாநிலங்களுக்கும் இடங்கள் அதிகரிக்கும் என்பதால் அவற்றின் பங்கு குறையாது என்பதே மத்திய அரசின் வாதமாகும்.

