விவசாயிகளின் பயிர்க்கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்யாதது மற்றும் மேகதாது விவகாரத்தில் மெத்தனமாக செயல்படுவது போன்றவற்றை எதிர்த்து, தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து வருவாய் மாவட்டத் தலைநகரங்களிலும் வரும் ஆகஸ்ட் 14-ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையின், 2026 சட்டமன்றத் தேர்தலின் போது, 5 ஏக்கருக்குள் நிலம் வைத்துள்ள விவசாயிகளின் கூட்டுறவுப் பயிர்க்கடன் முழுமையாகவும், 5 ஏக்கருக்கு மேல் வைத்துள்ளவர்களின் கடனில் 50% தள்ளுபடி செய்யப்படும் என தவெக வாக்குறுதி அளித்தது. ஆனால், ஆட்சிக்கு வந்த பிறகு குறு, சிறு விவசாயிகளுக்கு ரூ.75,000 வரை மட்டுமே முழுத் தள்ளுபடியும், அதற்கு மேல் வாங்கியவர்களுக்கு ரூ.35,000 மட்டுமே தள்ளுபடியும் என்று விவசாயிகளைத் தரம் பிரித்து அறிவித்திருப்பது விவசாயிகளிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஆகஸ்ட் 6 அன்று தவெக கூட்டணி அரசு தாக்கல் செய்த வேளாண் நிதிநிலை அறிக்கையிலும் பயிர்க்கடன் முழுமையாகத் தள்ளுபடி செய்யப்படும் என்ற அறிவிப்பு வெளியிடப்படவில்லை. இது விவசாயிகளை வஞ்சிக்கும் செயலாகும்.

கர்நாடக அரசு காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை முடக்கப் பார்த்தாலும், தவெக அரசு மெத்தனப் போக்கையே கடைப்பிடித்து வருகிறது.

இந்த விவகாரங்களைக் கண்டித்து அதிமுக மற்றும் டெல்டா மாவட்ட விவசாய சங்கங்கள் சார்பில் ஏற்கனவே போராட்டங்கள் நடத்தப்பட்ட நிலையில், வரும் ஆகஸ்ட் 14 (வெள்ளிக்கிழமை) காலை 9.30 மணியளவில் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து வருவாய் மாவட்டத் தலைநகரங்களிலும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்திற்கு எடப்பாடி பழனிசாமி நேரில் தலைமை தாங்குகிறார். சென்னை மாவட்டம் நீங்கலாக ஏனைய மாவட்டங்களில் ஆர்ப்பாட்டத்திற்குத் தலைமை தாங்குவோர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மேலும், மாவட்டக் கழகச் செயலாளர்கள் அனைவரும் ஒன்றிணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தைச் சிறப்பாக ஏற்பாடு செய்து நடத்திட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version