திருத்தணி சிறுவன் கடத்தல் வழக்கில் தொடர்புடைய ஏ.டி.ஜி.பி ஜெயராமனைக் கைதுசெய்ய பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது. அப்போது பணியிடை நீக்கம் செய்யப்பட்டது குறித்து நாளைய தினத்திற்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என்று தமிழ்நாடு காவல்துறைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருவள்ளுர் மாவட்டம் காளம்பாக்கத்தைச் சேர்ந்த இளைஞர் தனுஷ். தேனி மாவட்டத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரை காதலித்து கடந்த ஏப்ரல் மாதம் 15-ந் தேதி திருமணம் செய்து கொண்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பெண்ணின் பெற்றோர், மகேஸ்வரி என்பவரின் உதவியுடன் மகளை மீட்க முயற்சி மேற்கொண்டனர்.
இதற்கு ஆயுதப்படை ஏடிஜிபியான ஜெயராமனை மகேஸ்வரி தொடர்பு கொண்டுள்ளார். அவர் புரட்சி பாரதம் கட்சியின் தலைவரும், கேவி குப்பம் தொகுதி எம்எல்ஏவுமான ஜெகன் மூர்த்தியை தொடர்பு கொண்டு உதவி கேட்டுள்ளார். அவர் தனது வழக்கறிஞர் சரத் என்பவரை அனுப்பி உள்ளார்.
இவர்கள் அனைவரும் ஏடிஜிபியின் அதிகாரபூர்வ வாகனமான TN06 G 0606 என்ற வாகனத்தில் தனுஷின் வீட்டிற்கு சென்று மிரட்டியுள்ளனர். தனுஷ் இல்லாத நிலையில் அவரது தம்பியான 17 வயது சிறுவனை காரில் கடத்தியுள்ளனர். 100-க்கு போன் செய்து தனுஷின் அம்மா தகவலை தெரிவிக்க போலீசார் தேடுதல் வேட்டையில் இறங்கினர். இதனை அறிந்து கொண்டவர்கள் காரில் இருந்த சிறுவனை இறக்கி விட்டு தப்பியோடினர்.
இதுதொடர்பான வழக்கில் ஆள் கடத்தலில் ஈடுபட்ட குற்றத்திற்காக ஏடிஜிபி ஜெயராமனை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது. அவர் அலுவல்ரீதியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் அவர் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதி உஜ்ஜல் புயான் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் தான் ஒரு எதிர்மனுதாரராக இல்லாத நிலையில் தனக்கு கைது உத்தரவு பிறப்பித்தது செல்லாது என்றும், தனக்கும் இந்த வழக்கிற்கும் சம்மந்தம் இல்லை என்று ஜெயராமன் தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார்.
மூத்த காவல் அதிகாரி விசாரணைக்கு ஒத்துழைப்பு கொடுத்துள்ளார், அவரது இடைநீக்கத்தை ரத்து செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் கூறினர். ஏடிஜிபி ஜெயராமன் பணியிடை நீக்கத்தை ரத்து செய்வது தொடர்பாக உரிய விளக்கத்தை கேட்டு தெரிவிப்பதாக தமிழக அரசு தரப்பு வழக்கறிஞர் கூறினார்
பணியிட நீக்கத்தை ரத்து செய்வது தொடர்பாக உரிய விளக்கத்தை கேட்டு நாளைய தினமே உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்க தமிழ்நாடு அரசு வழக்கறிஞருக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.