சென்னை சட்டமன்றத் தேர்தல் தமிழக அரசியல் களத்தில் பல அதிரடி மாற்றங்களை ஏற்படுத்தியுள்ள நிலையில், அதிமுகவில் இருந்து முக்கிய புள்ளிகள் தொடர்ந்து திமுக மற்றும் தமிழக வெற்றி கழகம் (தவெக) நோக்கி நகர்வது கட்சியின் உள்ளடி நெருக்கடியை பிரதிபலிக்கிறது. இந்த வரிசையில், அதிமுகவின் முன்னாள் அமைச்சர்களான டாக்டர் சி.விஜயபாஸ்கர் மற்றும் எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்ட ஐந்து முன்னாள் அமைச்சர்கள், எட்டு மாவட்ட செயலாளர்கள், 208 ஒன்றிய செயலாளர்கள் மற்றும் 250க்கும் மேற்பட்ட முக்கிய நிர்வாகிகள் இன்று தவெகவில் இணைகின்றனர்.

இன்று (வியாழக்கிழமை) காலை மாமல்லபுரத்தில் உள்ள ஒரு தனியார் நட்சத்திர ஹோட்டலில் பிரம்மாண்ட இணைப்பு விழா நடைபெறவுள்ளது. அமைச்சர்கள் ஆனந்த் மற்றும் ஆதவ் அர்ஜுனா முன்னிலையில் காலை 10 மணியளவில் தொடங்கும் இந்த நிகழ்ச்சியில், அதிமுகவில் இருந்து ராஜினாமா செய்த டாக்டர் சி.விஜயபாஸ்கர் மற்றும் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் தங்கள் 15,000 ஆதரவாளர்களுடன் தவெகவில் சேருகின்றனர்.

திருச்சியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் எஸ்.வளர்மதி, திருப்பூரைச் சேர்ந்த எம்.எஸ்.எம்.ஆனந்தன், முன்னாள் எம்.எல்.ஏ. மான்ராஜ் (ஸ்ரீவில்லிபுத்தூர்) உள்ளிட்டோரும் இணைகின்றனர். கும்பகோணம் எம்.ராம்குமார், ராஜவர்மன் (திருச்சுழி), சதன்பிரபாகர் (பரமக்குடி), திருஞானசம்பந்தம் (பேராவூரணி) போன்ற முன்னாள் எம்.எல்.ஏ.க்களும், புதுக்கோட்டை பி.கே.வைரமுத்து, பெரம்பலூர் இளம்பை தமிழ்செல்வன், தஞ்சை ஒரத்தநாடு மா.சேகர், திருச்சி சீனிவாசன் உள்ளிட்ட மாவட்ட செயலாளர்களும் இந்த இணைப்பில் பங்கேற்கின்றனர்.
கரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட பல மாவட்டங்களில் இருந்து 200 பேருந்துகள் மற்றும் 600 கார்கள் மூலம் 15,000க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் பெரும் எண்ணிக்கையில் வந்து கலந்துகொள்ளவுள்ளதால், மாமல்லபுரம் பகுதி பரபரப்பாகக் காட்சியளிக்கிறது.

இணைப்பு குறித்து இரு முன்னாள் அமைச்சர்களும் கூட்டாக அளித்த பேட்டியில், “அதிமுக இயக்கத்துக்கு எதிராக நாங்கள் ஒருபோதும் செயல்படவில்லை. பல சோதனை காலங்களிலும் விசுவாசத்துடன் உறுதுணையாக இருந்தோம். சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக தவெகவுடன் கூட்டணி வைக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமியிடம் வலியுறுத்தினோம். ஆனால் அவர் அதை புறக்கணித்தார். திமுக ஆதரவுடன் முதலமைச்சர் பதவிக்கு முயன்றார்.

திமுக-அதிமுக கூட்டணி இயற்கைக்கு மாறானது மட்டுமல்ல, எம்.ஜி.ஆர். உருவாக்கிய இயக்கத்தின் அடிப்படை நோக்கத்துக்கே எதிரானது” என்று வலியுறுத்தினர். எடப்பாடியின் செயல்பாடுகளால் ஏற்பட்ட விரக்தியால் மனவேதனையுடன், கண்ணீரோடு அதிமுகவில் இருந்து விலகும் முடிவை எடுத்ததாகவும், இன்று தவெகவில் இணைவதாகவும் அவர்கள் தெரிவித்தனர். இந்த பெரும் இணைப்பு அதிமுகவின் உறுதியை பலவீனப்படுத்தும் என அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version