ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் இடையிலான எல்லைப் பதற்றம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், இரு நாடுகளும் ஒருவருக்கொருவர் தாக்குதல்களை நடத்தி வருவது பிராந்திய அமைதிக்கு பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளது. கடந்த சில நாட்களில் நடைபெற்ற தாக்குதல்கள் போர் சூழலை உருவாக்கும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளன.
கடந்த ஜூன் 28ஆம் தேதி பாகிஸ்தான் விமானப்படை ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதிகளில் வான்வழித் தாக்குதல் நடத்தியது. இதில் 28 பொதுமக்கள் உயிரிழந்ததாகவும், 49 பேர் காயமடைந்ததாகவும் ஐக்கிய நாடுகள் சபை தகவல் வெளியிட்டது. இந்தத் தாக்குதல் பொதுமக்களைக் குறிவைத்ததாக ஆப்கானிஸ்தான் கடும் கண்டனம் தெரிவித்திருந்தது. இதற்கு பதிலடியாக இன்று ஆப்கானிஸ்தானை ஆளும் தாலிபான் அரசு பாகிஸ்தானின் உள்நாட்டுப் பகுதிகளில் டிரோன் தாக்குதல்களை மேற்கொண்டது.
கைபர் பக்துன்வா மாகாணத்தின் சரண் பகுதியில் உள்ள ஒரு பள்ளி மற்றும் பலுசிஸ்தான் மாகாணத்தின் சில இடங்களை இலக்காக்கி தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த இடங்கள் ISIS-K (Islamic State-Khorasan) அமைப்பினரின் மறைவிடங்களாகப் பயன்படுத்தப்படுவதாக தாலிபான் தரப்பு கூறியுள்ளது. தாலிபான் ராணுவத் துறை செய்தித் தொடர்பாளர் வெளியிட்ட அறிக்கையில், “ISIS-K பயங்கரவாதிகள் ஆப்கானிஸ்தானில் அப்பாவி மக்களைத் தாக்கிவிட்டு பாகிஸ்தானில் பதுங்கி கொள்கின்றனர்.
அவர்களை ஒழிக்கும் வகையில் துல்லியமான டிரோன் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இதில் பல உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்கும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் தரப்போ, ஆப்கானிஸ்தானின் நான்கு டிரோன்களை சுட்டு வீழ்த்தியதாக அறிவித்துள்ளது. மேலும், “ஆப்கானிஸ்தான் தனது தாக்குதல்களை உடனடியாக நிறுத்த வேண்டும். இல்லையெனில் உரிய பதிலடி கொடுக்கப்படும்” என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.
ISIS-K அமைப்பின் பின்னணி: ISIS-K என்று அழைக்கப்படும் இஸ்லாமிய அரசு-கொராசான் அமைப்பு, 2015ஆம் ஆண்டு உருவானது. முதலில் தாலிபான்களுடன் இணைந்து செயல்பட்ட இந்தக் குழு பின்னர் பிரிந்து தனித்து இயங்கத் தொடங்கியது. இஸ்லாமிய ஷரியா சட்டத்தின் கீழ் கடுமையான இஸ்லாமிய ஆட்சியை நிலைநாட்ட வேண்டும் என்பதே இவர்களின் முக்கிய நோக்கம். ஷியா முஸ்லிம்கள் உள்ளிட்ட பல இன மற்றும் மதக் குழுக்களை இலக்காக்கி தாக்குதல்களை நடத்தி வரும் இந்த அமைப்பு, ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் இரு நாடுகளிலும் பல்வேறு பயங்கரவாதச் சம்பவங்களுக்கு காரணமாக உள்ளது.
தற்போதைய மோதல்கள் இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால எல்லைப் பிரச்சினை மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளின் விளைவாகக் கருதப்படுகிறது. பாகிஸ்தான் தரப்பு தாலிபான்கள் ஆப்கானிஸ்தானில் இருந்து பயங்கரவாதிகளை கட்டுப்படுத்தத் தவறிவிட்டதாக குற்றம்சாட்டுகிறது. தாலிபான்கள் மறுபுறம், பாகிஸ்தான் தங்கள் நாட்டின் இறையாண்மையை மீறுவதாக வாதிடுகின்றன. இந்த மோதல் மேலும் தீவிரமடைந்தால், தெற்காசியப் பிராந்தியம் முழுவதும் பாதிப்புக்கு உள்ளாகும் அபாயம் உள்ளது. சர்வதேச சமூகம் உடனடியாக தலையிட்டு இரு நாடுகளையும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வலியுறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
