நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய நீட் தேர்வு முறைகேடுகள் மற்றும் பரவலான போராட்டங்களுக்குப் பிறகு, வினாத்தாள் கசிவுகள் மற்றும் முறைகேடுகளை தடுக்கும் வகையில் கடுமையான சட்டப்பிரிவுகள் மற்றும் தண்டனைகளைக் கொண்ட புதிய திருத்த மசோதா நாடாளுமன்ற மக்களவையில் நாளை (ஜூலை 27-ஆம் தேதி, திங்கள்கிழமை) தாக்கல் செய்யப்படவுள்ளது.

மத்திய கல்வித்துறை அமைச்சராக இருந்த தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்த சில மணி நேரங்களுக்குப் பிறகு இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. மக்களவையின் அலுவல் பட்டியலின்படி, மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் ‘பொதுத்தேர்வுகள் திருத்த மசோதா, 2026’-ஐ (Public Examinations (Prevention of Unfair Means) Amendment Bill, 2026) தாக்கல் செய்யவுள்ளார். மசோதா அறிமுகப்படுத்தப்பட்டவுடன், அதை பரிசீலனைக்கு எடுத்துக்கொண்டு நிறைவேற்றுவதற்கான வழக்கமான தீர்மானத்தையும் அவர் முன்வைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே, டெல்லி ஜந்தர்பந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த ‘காக்ரோச் ஜனதா கட்சி’ அமைப்பினரின் முக்கிய கோரிக்கைகளை மத்திய அரசு ஏற்றுக் கொண்டதை அடுத்து, தங்களது போராட்டத்தை அவர்கள் அதிகாரப்பூர்வமாக வாபஸ் பெற்றுள்ளனர். CJP பிரதிநிதிகளுடன் நடைபெற்ற மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தைக்குப் பிறகு, தேர்வு முறை சீர்திருத்தங்கள் குறித்த தங்களின் ஐந்து அம்ச கோரிக்கை மனுவை அவர்கள் சமர்ப்பித்ததாக மத்திய அமைச்சர் ஜே.பி. நட்டா தெரிவித்தார். மேலும், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது புதிய வழக்குகளோ அல்லது சட்ட நடவடிக்கைகளோ பாயாது என்றும் மத்திய அரசு உறுதியளித்துள்ளது.

வினாத்தாள் கசிவு மற்றும் தேர்வு முறைகேடுகளை முழுமையாக ஒடுக்கும் வகையில் இந்த மசோதாவில் மிகக் கடுமையான சட்ட விதிகள் வகுக்கப்பட்டுள்ளன. அதன்படி, வினாத்தாள் கசிவு வழக்குகள் தொடர்பான விசாரணைகள் இரண்டு மாதங்களுக்குள் முடிக்கப்பட வேண்டும்.

குற்றவாளிகளுக்கு குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் முதல் அதிகபட்சமாக 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும், ரூ. 50 லட்சம் வரை அபராதமும் விதிக்கப்படும்.

ஒருங்கிணைந்த அல்லது திட்டமிட்ட முறையில் மோசடியில் ஈடுபடுவோருக்கு குறைந்தபட்சம் 7 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 10 கோடி வரை அபராதமும் விதிக்கப்படும்.

இதுபோன்ற வழக்குகளை விசாரிக்க அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் சிறப்பு துரித நீதிமன்றங்களை அமைக்க இந்த மசோதா கட்டாயமாக்குகிறது. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட மூன்று மாதங்களுக்குள் தினசரி விசாரணையை நடத்தி தீர்ப்பு வழங்கப்படும்.

தேவைப்படும் போதெல்லாம் வினாத்தாள் கசிவு வழக்குகளை விசாரிக்க மத்திய அரசு ஒரு சிறப்புப் படையை உருவாக்க இந்தச் சட்டம் அதிகாரம் அளிக்கிறது.

கடந்த வெள்ளிக்கிழமையன்று கூடிய மத்திய அமைச்சரவை இந்த மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்வதற்கு ஒப்புதல் அளித்தது குறிப்பிடத்தக்கது. தேர்வு முறைகேடுகள் குறித்து கடுமையான சட்டம் கொண்டுவரப்பட்டு துரித நீதிமன்றங்கள் மூலம் விசாரிக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி ஏற்கனவே உறுதியளித்திருந்த நிலையில், இந்த புதிய சட்ட முன்வடிவு தாக்கல் செய்யப்படவுள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version