தமிழக சட்டமன்றத் தேர்தலுக்குப் பின் அ.தி.மு.க.வில் ஏற்பட்டிருந்த உட்கட்சி மோதல் முடிவுக்கு வந்துள்ளது. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராகக் களமிறங்கிய எஸ்.பி.வேலுமணி – சி.வி.சண்முகம் தரப்பினர் இன்று முழுமையாக இணைந்து, கட்சியை ஒன்றிணைத்துள்ளனர். இதனால் அ.தி.மு.க.வின் சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்ந்துள்ளது.

தேர்தலுக்குப் பின்னர், எஸ்.பி.வேலுமணி மற்றும் சி.வி.சண்முகம் ஆதரவாளர்களான 25 எம்.எல்.ஏ.க்கள் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கினர். சட்டமன்றத்தில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பின்போது அவர்கள் தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களித்து, கட்சி கொறடா உத்தரவை மீறினர். இதைத் தொடர்ந்து, அந்த 25 எம்.எல்.ஏ.க்களையும் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என எடப்பாடி தரப்பில் சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகரிடம் மனு அளிக்கப்பட்டது. அதேசமயம், எஸ்.பி.வேலுமணி தரப்பிலும் சபாநாயகரிடம் மனு அளிக்கப்பட்டது.

“எங்களிடம்தான் அதிக எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர்; நாங்கள் நியமித்தவரையே கொறடாவாக அங்கீகரிக்க வேண்டும்” என அவர்கள் கோரிக்கை வைத்தனர். சபாநாயகருக்கு இந்த மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க 90 நாட்கள் அவகாசம் உண்டு. ஆனால், மனு தாக்கல் செய்த தரப்பினர் 15 நாட்களுக்குள் மனுக்களை வாபஸ் பெறலாம். நாளை (மே 28) வரை அந்த அவகாசம் இருந்த நிலையில், இரு தரப்பும் சமரசப் பாதையில் சென்றுள்ளன. இந்த இடைக்காலத்தில், வேலுமணி தரப்பைச் சேர்ந்த ஐந்து எம்.எல்.ஏ.க்கள் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்தனர். நான்கு பேர் தங்கள் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்து தவெகவில் இணைந்தனர்.

இந்தப் பின்னணியில் இரு அணிகளும் பேச்சுவார்த்தை நடத்தின. நேற்று எடப்பாடி பழனிசாமியின் பசுமை வழிச்சாலை இல்லத்தில் வேலுமணி தரப்பு எம்.எல்.ஏ.க்கள் நத்தம் விஸ்வநாதன், திருத்தணி அரி, தங்கமணி உள்ளிட்டோர் சந்தித்தனர். பதவிக் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. “பறிக்கப்பட்ட பதவிகளைத் திரும்ப ஒப்படைக்க வேண்டும்” என வேலுமணி தரப்பு வலியுறுத்தியது. ஆனால் எடப்பாடி தரப்பு அதை ஏற்க மறுத்தது. “ஏற்கெனவே அந்தப் பதவிகள் மற்றவர்களுக்கு வழங்கப்பட்டுவிட்டன. எனவே திரும்பப் பறிக்க முடியாது. ஆறு மாதங்கள் கழித்து வேறு பொறுப்புகள் வழங்கப்படும்” என பதிலளிக்கப்பட்டதாகத் தெரிகிறது. இதனால் நேற்றைய சந்திப்பு தோல்வியில் முடிந்தது.

இருப்பினும், எம்.எல்.ஏ. பதவியைத் தக்கவைக்க வேண்டும் என்பதில் வேலுமணி தரப்பினர் உறுதியாக இருந்தனர். இன்று காலை சென்னை பட்டினப்பாக்கம் எம்.ஆர்.சி. நகரில் உள்ள சி.வி.சண்முகம் அலுவலகத்தில் முக்கிய ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. எஸ்.பி.வேலுமணி தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் நத்தம் விஸ்வநாதன், தங்கமணி, காமராஜ், கே.சி.வீரமணி, எம்.ஆர்.விஜயபாஸ்கர், டாக்டர் சி.விஜயபாஸ்கர், கே.பி.அன்பழகன், லீமா ரோஸ், அருள்மொழித்தேவன், ரவி மனோகரன், சேகர், திருத்தணி அரி, மைக்கேல் ராயப்பன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கூட்டத்துக்குப் பின் பேசிய கே.சி.வீரமணி, “அ.தி.மு.க.வில் உள்ள அனைத்துப் பிரச்சினைகளும் முடிவுக்கு வந்துவிட்டன. அனைவரும் ஒன்றாகிவிட்டோம். தாய் பிள்ளைகள் அனைவரும் ஒன்றாக இருக்கிறோம்” என்றார். லீமா ரோஸ் “இரு அணிகளும் இணைப்பு உறுதியாகிவிட்டது” எனத் தெரிவித்தார். சி.வி.சண்முகம் இந்தக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. ஆலோசனைக்குப் பின் வேலுமணி தலைமையில் 13 பேர் கொண்ட குழு எடப்பாடி பழனிசாமியின் இல்லத்துக்குச் சென்று சந்தித்தது. அங்கு அ.தி.மு.க.வில் முழுமையாக இணைவது என முடிவெடுக்கப்பட்டது. தங்கமணி, நத்தம் விஸ்வநாதன், கே.சி.வீரமணி, கே.பி.அன்பழகன், எம்.ஆர்.விஜயபாஸ்கர், லீமா ரோஸ் உள்ளிட்டோர் இதில் அடங்குவர்.

சி.வி.சண்முகம், சி.விஜயபாஸ்கர், அருள்மொழித்தேவன் ஆகியோர் வரவில்லை. மன்னிப்புக் கடிதம் தொடர்பான கோரிக்கை காரணமாக சி.வி.சண்முகம் கோபத்தில் இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இணைப்புப் பேச்சுக்கு இணையாக, சட்டமன்றக் குழு தலைவர் மற்றும் கொறடா தொடர்பான மனுக்களையும், கட்சித் தாவல் சட்டத்தின் கீழான தகுதி நீக்க மனுக்களையும் சபாநாயகரிடம் இருந்து இரு தரப்பும் திரும்பப் பெற்றன. இதன்மூலம் அ.தி.மு.க.வில் நீண்டகாலமாக நீடித்த உட்கட்சி மோதல் முடிவுக்கு வந்துள்ளது. இந்த இணைப்பால் அ.தி.மு.க. தொண்டர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர். கட்சியின் ஒற்றுமை வலுப்பெற்றுள்ள நிலையில், எதிர்கால அரசியல் நகர்வுகளுக்கு இது பெரும் வலு சேர்க்கும் எனக் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version