கோவை பெரியநாயக்கன்பாளையத்தில் போலி தங்கக் கட்டிகளைக் கொடுத்து தங்க நகைகளைப் பறித்துச் சென்ற ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த கணவன்- மனைவியை காவல்துறையினர் கைது செய்தனர்.

கோவை பெரியநாயக்கன்பாளையம் ஜோதிபுரத்தைச் சேர்ந்தவர் உதயகுமார். இவர் அப்பகுதியில் நகைக்கடை நடத்தி வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்த சரண்யா என்பவர் மூலம் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த வெங்கட்ராவ் (45) மற்றும் அவரது மனைவி காமாட்சி (35) ஆகிய இருவர் உதயகுமாரிடம் அறிமுகமானனர்.

தங்களிடம் 380 கிராம் தங்கக் கட்டிகள் இருப்பதாகக் கூறி, அதை விற்க உதவி கேட்டுள்ளனர். ஒரு கட்டியை உதயகுமாரிடம் கொடுத்து ஆய்வு செய்யச் சொல்லியுள்ளனர். உதயகுமார் அதைச் சோதித்தபோது, அது அசல் தங்கம் போலவே இருந்துள்ளது. இதனை நம்பிய உதயகுமார், அந்த தங்கக் கட்டிகளைப் பெற்றுக்கொண்டு அதற்குப் பதிலாகத் தனது கடையில் இருந்த 6.5 பவுன் தங்க நகைகளையும், சரண்யாவிடமிருந்த 1 பவுன் தங்கச் சங்கிலியையும் அவர்களிடம் கொடுத்துள்ளார். பிறகு முழுமையாகச் சோதித்தபோதுதான், அந்தத் தங்கக் கட்டிகள் போலி என்பது தெரியவந்தது. உடனடியாக நகைக்கடை உரிமையாளர் உதயகுமார் பெரியநாயக்கன்பாளையம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். தனிப்படை போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

சாமநாயக்கன்பாளையம் பகுதியில் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, சந்தேகத்திற்குரிய வகையில் நின்றிருந்த வெங்கட்ராவ் மற்றும் காமாட்சி ஆகியோரைப் பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் முன்னுக்குப் பின் முரணாகப் பேசியதால், அவர்கள் தான் அந்த மோசடி கும்பல் என்பது உறுதி செய்யப்பட்டது. இருவரிடமிருந்தும் 7.5 பவுன் நகைகள் மற்றும் போலி தங்கக் கட்டிகளைப் பறிமுதல் செய்த போலீசார், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

விசாரணையில், அந்தப் போலி தங்கக் கட்டியின் ஒரு பகுதியில் மட்டும் உண்மையான தங்கத்தைச் சிறிய அளவில் ஒட்டி வைத்திருந்தது தெரியவந்தது. அதை உடைத்துச் சோதிக்கும்போது அது உண்மையான தங்கம் போலவே தெரிவதால், நகைக்கடை உரிமையாளர்கள் ஏமாந்திருப்பது கண்டறியப்பட்டது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version