வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி திடீரென வேகம் எடுத்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
வங்கக்கடலில் கடந்த 24ம் தேதி உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. இது தீவிர புயலாக மாறியதை தொடர்ந்து காலை நிலவரப்படி சென்னையில் இருந்து 550 கி.மீ. கிழக்கு-தென்கிழக்கே நிலை கொண்டுள்ள புயல் அடுத்த 12 மணி நேரத்தில் மேற்கு-வடமேற்கு நோக்கி வங்கக்கடலின் தென்மேற்கு மற்றும் மேற்கு மத்திய பகுதியின் மேல் தொடர்ந்து நகர்ந்து செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே பிற்பகல் நிலவரப்படி சென்னைக்கு 480 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ள புயல் மணிக்கு 16 கி.மீ. வேகத்தில் இருந்து 18கி.மீ. வேகத்தில் உயர்ந்துள்ளதாக வானிலை அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புயல் கரையை கடப்பதையொட்டி இன்று மற்றும் நாளை தமிழ்நாட்டில் சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், நாளை ராணிப்பேட்டை, திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
