திருப்பரங்குன்றம் விவகாரத்தில் கருத்து சொல்லாத தமிழக வெற்றிக்கழகத்தின் நிலைப்பாட்டை மையப்படுத்தி அண்ணாமலை மற்றும் அருண்ராஜ் இடையே வார்த்தைப்போர் வெடித்துள்ளது.
தமிழக அரசியலில் பெரும் புயலை கிளம்பியுள்ள திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரத்தில் ஒவ்வொரு கட்சியும், அதன் தலைவர்களும் ஒரு கருத்தை அறிவித்து வரும் நிலையில், தற்போதைய சூழலில் ‘நாங்கள் தான் மாற்று அரசியல் தரப்போகிறவர்கள்’ என வந்துள்ள தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய், இதுவரை வாய் திறக்காதது குறித்து பேசியிருந்த பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, “அரசியலில் எது எப்படி இருந்தாலும் பேசவேண்டிய இடத்தில் பேசினால் விஜய் நல்ல அரசியல்வாதியாக வருவார். இவ்வளவு பிரச்சனைகள் நடக்கும்போது நான் வேடிக்கை மட்டும் தான் பார்ப்பேன் என்றால், உங்களை(விஜய்யை) நம்பி எப்படி மக்கள் ஆட்சிப் பொறுப்பை கொடுப்பார்கள்? தவறு என்றால் தவறு எனக்கூறவேண்டும். சரி என்றால் சரி எனக்கூறவேண்டும். பேசவே மாட்டேன் என்றால் அது என்ன அரசியல்?” என்று கேள்வி எழுப்பியிருந்தார்.
இதற்கு பதில் தெரிவிக்கும் விதமாக பேசிய தமிழக வெற்றிக்கழகத்தின் நிர்வாகி அருண்ராஜ், “விஜய் அமைதியாக இருப்பதை விமர்சித்துள்ள பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு விஜய் கூறிய டயலாக் நன்றாக பொருந்தும். அவர் கம்முனு இருக்க வேண்டிய இடத்தில் கம்முனு இருந்திருந்தால், அவர் இருந்திருக்க வேண்டிய இடத்தில் தொடர்ந்து இருந்திருப்பார். எங்கள் கட்சி தலைவர் எப்போ எதை பேச வேண்டுமென்று அவர் சொல்ல தேவையில்லை. அது எங்கள் தலைவருக்கு தெரியும்” எனக்கூறியிருந்தார்.
இதற்கு மீண்டும் பதில் அளித்த அண்ணாமலை, சற்று அநாகரிக வார்த்தைகளுடன் சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருப்பது தவெகவினரை சூடாக்கியுள்ளது. அதாவது, “இந்த அண்ணாமலை என்கின்ற நாயின் வால் வளைந்து தான் இருக்கும், யாராலும் அதை நிமிர்த்த முடியாது. ஏனெனில் இது உண்மையை பேசும் நாய். ஜால்ரா அடிக்காத நாய். கட்சியில் சேர்ந்ததற்காக ஜால்ரா அடிக்கும் நாய் நான் இல்லை.
இது நன்றிக்கான நாய் மோடிக்கான விசுவாசமான நாய். ஒரு சினிமா நடிகருக்கு ஜால்ரா அடிப்பதற்காக அரசு பதவியை ராஜினாமா செய்துவிட்டு வரவில்லை. நான் ஒரு உன்னதமான கோட்பாட்டுக்காக வந்திருக்கிறேன். வரும் காலங்களிலும் பிரச்சினைகளைச் சந்திக்கத்தான் போகிறேன். அதையும் மக்களுக்காக ஏற்றுக் கொள்வேன், அதை பெருமையாக நினைக்கிறேன். ஜால்ரா அடிச்சு தான் அந்த பதவியில் இருக்க வேண்டும் என்றால் அந்த பதவி எனக்கு தேவையில்லை” எனப் பேசியுள்ளார்.
தங்களது கட்சியை சேர்ந்த அருண்ராஜ் அவர்களை நாய் என குறிப்பிடுவது போல சர்ச்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ள அண்ணாமலைக்கு தவெகவினர் சமூக வலைத்தளங்களில் கண்டனங்களை தெரிவித்து, கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
