தமிழக பாஜகவின் முன்னாள் தலைவரான அண்ணாமலையின் அரசியல் எதிர்காலம் குறித்துப் பல்வேறு யூகங்கள் எழுந்து வரும் நிலையில், அவர் விரைவில் ஒரு முக்கிய முடிவை எடுக்கக்கூடும் என்ற தகவல் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அண்ணாமலைக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ள தகவலின்படி, அவர் பாஜகவின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான நிதின் நபினை சந்திக்க அனுமதி கோரியுள்ளார். இந்தச் சந்திப்பைத் தொடர்ந்து, ஜூன் 3ஆம் தேதிக்குள் அண்ணாமலை தரப்பில் இருந்து ஒரு முக்கிய அறிவிப்பு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் தகவல் சமூக வலைதளங்களிலும் அரசியல் வட்டாரங்களிலும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.
பாஜகவுடன் விரிசலா?
மத்திய மோடி அரசின் ‘மும்மொழிக் கொள்கைக்கு எதிராக அண்ணாமலை தனது எக்ஸ் பக்கத்தில் பகிரங்கமாகத் தனது எதிர்ப்பைப் பதிவு செய்திருந்தார். அதன் பின்னரே, அவருக்கும் பாஜக தலைமைக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவி வருவதாகக் கூறப்படும் யூகங்கள் தீவிரமடைந்தன. கடந்த சில நாட்களாக இதுகுறித்து பல்வேறு செய்திகள் உலா வந்தபோதிலும், சமூக வலைதளங்களில் எப்போதும் சுறுசுறுப்பாக இருக்கும் அண்ணாமலை, இதற்கு மறுப்பு தெரிவித்து எந்தவொரு விளக்கமும் அளிக்காமல் மௌனம் காப்பது இந்த யூகங்களுக்கு மேலும் வலுசேர்த்துள்ளது.
இதற்கிடையில், அண்ணாமலை பாஜகவில் இருந்து விலகி ‘மக்கள் சக்தி இயக்கம்’ என்ற பெயரில் புதிய அரசியல் கட்சி ஒன்றைத் தொடங்கத் திட்டமிட்டுள்ளதாகப் நாளிதழ் ஒன்றில் செய்தி வெளியாகியுள்ளது. இருப்பினும், இது குறித்து அண்ணாமலை தரப்பில் இருந்து இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளிவரவில்லை.
2021 முதல் 2025 வரை தமிழக பாஜக தலைவராக இருந்த அண்ணாமலை, திராவிடக் கட்சிகளின் ஆதிக்கம் நிறைந்த தமிழகத்தில் பாஜகவின் செல்வாக்கை அடிமட்டம் வரை கொண்டு சேர்த்ததில் முக்கியப் பங்கு வகித்தார்.
இருப்பினும், வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைக்க பாஜக தலைமை எடுத்த முடிவில் அண்ணாமலைக்கு உடன்பாடில்லை எனக் கூறப்படுகிறது. மேலும், தேர்தல் பிரச்சாரங்களின் போது அவர் பெருமளவில் ஓரங்கட்டப்பட்டதாகவும், இதனால் அவர் மிகுந்த அதிருப்தியில் இருந்ததாகவும் அவரது ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர்.
தமிழக அரசியலில் அடுத்தடுத்த திருப்பங்களை ஏற்படுத்தக் கூடிய அண்ணாமலையின் அடுத்த கட்ட நகர்வு என்னவாக இருக்கும் என்பது ஜூன் 3ஆம் தேதி தெரியவரும் என்பதால், ஒட்டுமொத்த அரசியல் உலகமும் அந்த நாளை நோக்கிக் காத்துக் கொண்டிருக்கிறது.
