தமிழகத்தின் கல்வி, விவசாயம் மற்றும் தொழில் துறை வளர்ச்சிக்கு அடித்தளமிட்ட ‘ஏழைப் பங்காளர்’ பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பிறந்தநாளில் அவரை நினைவு கூர்ந்து முதலமைச்சர் விஜய் கல்வி வணக்கம் செலுத்தி உள்ளார்.
முதலமைச்சர் விஜய் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், தமிழகத்தின் கிராமங்கள்தோறும் பள்ளிக்கூடங்களை அமைத்து கல்விக்கண் திறந்து, வறுமையால் வாடிய ஏழைக் குழந்தைகளின் பசியைப் போக்க மதிய உணவுத் திட்டம் தந்த மாமேதை, ஏழைப் பங்காளர், பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பிறந்தநாளில் அவரது தியாகத்தையும் சாதனைகளையும் நினைவுகூர்ந்து கல்வி வணக்கத்தை செலுத்துவதாக குறிப்பிட்டுள்ளார்.
கல்விச்சாலைகள் மட்டுமின்றி, நீர்த்தேக்கங்களையும், முக்கிய தொழிற்சாலைகளையும் உருவாக்கி, விவசாயம் மற்றும் தொழில் வளர்ச்சியின் மூலம் தமிழ்நாட்டு மக்களின் வாழ்வில் நிலையான மாற்றத்தை ஏற்படுத்திய மகத்தான தலைவர் என்று முதலமைச்சர் விஜய் புகழஞ்சலி செலுத்தி உள்ளார்.
எளிமை, நேர்மை, தியாகம், தொலைநோக்குப் பார்வை, மக்கள் சேவை போன்ற உயரிய பண்புகளால் இந்திய அரசியலில் தனி முத்திரைப் பதித்ததோடு மட்டுமல்லாமல், மக்கள் நலனுக்காக தன் வாழ்நாளை அர்ப்பணித்த பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் அடிச்சுவட்டில் நாமும் பயணித்து வளமான தமிழகத்தை உருவாக்க உறுதியேற்போம்!
கர்மவீரர் காமராஜரின் புகழ் ஓங்குக! என்று தனது எக்ஸ் பதிவில் முதலமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார்.
