திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோயிலில் பாதுகாப்பு குறித்த கவலைகள் தற்போது அதிகரித்துள்ளன. இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் இந்த பழமையான ஆலயத்தில், கடந்த இரு நாட்களுக்கு முன் ஐந்தாம் பிரகாரத்திலிருந்து ஒரு லாரி மர்மமான முறையில் காணாமல் போனது. சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் அந்த நபரை தேடி வருகின்றனர்.
கோயில் ஊழியர்கள் அனைத்து சாவிகளையும் பூட்டி வைத்திருந்த நிலையிலும், யாருடைய கண்ணிலும் படாமல் அந்நபர் உள்ளே நுழைந்தது எப்படி என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த சூழலில் இன்று மேலும் ஒரு சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ரமண மகரிஷி ஆசிரமம் மற்றும் அருணாச்சலேஸ்வரர் கோயிலுக்கு தரிசனம் செய்ய வரவுள்ள நிலையில், பவுனேஷ் மற்றும் மகேஷ் என்ற இரு நபர்கள் கேமரா பொருத்தப்பட்ட கண் கண்ணாடி (ரேபான் ஸ்மார்ட் கிளாஸ் ஏஐ கேமரா) அணிந்து கோயிலுக்குள் நுழைந்தனர்.
அண்ணாமலையார் மற்றும் உண்ணாமுலை அம்மன் சன்னதிகளை புகைப்படம் எடுக்க முயன்றதாகக் கூறப்படும் இவர்கள் ஹைதராபாத்தைச் சேர்ந்தவர்கள் என தகவல் கிடைத்துள்ளது. போலீசார் அவர்களிடம் கேமரா கண்ணாடி மற்றும் செல்போன்களை பறிமுதல் செய்து, புகைப்படம் எடுக்க வந்தார்களா அல்லது வேறு நோக்கமா என பல கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். அமைச்சரின் வருகையை முன்னிட்டு கோயில் சுற்றுப்புறம், ஹெலிபேடு மற்றும் பயண வழிகளில் ட்ரோன், ரிமோட் கட்டுப்பாட்டு விமானங்கள் பயன்பாடு தடை செய்யப்பட்டுள்ளது.
மூன்று அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இருப்பினும் ஸ்மார்ட் கிளாஸ் மூலம் பதிவு செய்யப்பட்ட சம்பவம், பாதுகாப்பில் உள்ள இடைவெளிகளை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது. இது சாதாரண நிகழ்வா அல்லது வேறு எண்ணத்துடன் நடந்ததா என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். கோயில் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
