நாடு முழுவதும் தினசரி ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் அளவிலான பரிவர்த்தனைகளை கையாளும் யுபிஐ, இலவச சேவையாக இருந்ததால் மிகப்பெரிய வெற்றியை அடைந்துள்ளது. பொதுமக்கள் மற்றும் சிறு வணிகர்கள் எந்த கட்டணமும் செலுத்தாமல் பயன்படுத்தும் இந்த அமைப்பு, இந்தியாவின் டிஜிட்டல் பணப்பரிமாற்றத்தின் முக்கிய தூணாக உருவெடுத்துள்ளது. இந்தச் சூழலில், வரி விதிப்பு மற்றும் பிற சட்டங்கள் (திருத்த) மசோதா 2026 மூலம் யுபிஐ மற்றும் ரூபே கார்டு பரிவர்த்தனைகளின் தற்போதைய இலவச ஏற்பாட்டை மாற்ற அரசுக்கு சட்டப்பூர்வ அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
மக்களவையில் இந்த மசோதா நிறைவேறியதை அடுத்து, வணிக தள்ளுபடி கட்டணம் (எம்டிஆர்) விதிக்கப்படும் என்ற தகவல்கள் பரவியதால் பொதுமக்களிடையே அதிர்ச்சி ஏற்பட்டது. காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் இதைக் கடுமையாக விமர்சித்தார். “டிஜிட்டல் பரிவர்த்தனைகளை இலவசமாக வைத்திருந்த சட்ட உத்தரவாதம் நீக்கப்படுகிறது. இந்தச் சுமை இறுதியில் சாதாரண மக்களையே சென்றடையும்” என்று அவர் குற்றம்சாட்டினார்.
இதற்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது எக்ஸ் பக்கத்தில் பதிலளித்தார். “ஆதாரமற்ற தகவல்களைப் பரப்புவதற்கு முன் கவனியுங்கள். எம்டிஆர் வணிகர்களுக்கு மட்டுமே பொருந்தும். வாடிக்கையாளர்களுக்கு இது பொருந்தாது. இதன் மூலம் கிடைக்கும் வருவாய் வங்கிகள் மற்றும் யுபிஐ நிறுவனங்கள் உள்கட்டமைப்பு, புதிய தொழில்நுட்பங்கள், புத்தாக்கம் மற்றும் பாதுகாப்பு வசதிகளில் முதலீடு செய்ய உதவும். இதன் பலன் அனைத்து பயனாளர்களுக்கும் கிடைக்கும்” என்று அவர் தெளிவுபடுத்தினார்.
இந்த மசோதா நேரடியாக கட்டணத்தை விதிக்கவில்லை. மாறாக, Payment and Settlement Systems Act, 2007-இன் பிரிவு 10A-ல் திருத்தம் செய்து, எந்தெந்த மின்னணு பரிவர்த்தனைகள் இலவசமாகத் தொடர வேண்டும் என்பதை அரசு அறிவிப்பு மூலம் தீர்மானிக்க சட்டப்பூர்வ அடித்தளத்தை உருவாக்குகிறது. பெரிய வணிகர்கள் (ஆண்டு விற்றுமுதல் குறிப்பிட்ட அளவுக்கு மேல்) மற்றும் ரூ.2,000-க்கு மேற்பட்ட பரிவர்த்தனைகளுக்கு மட்டுமே எம்டிஆர் பரிசீலிக்கப்படலாம் என்ற தகவல்கள் உள்ளன. சிறு வணிகர்களும் பொதுமக்களும் தொடர்ந்து இலவசமாகப் பயன்படுத்த வாய்ப்புள்ளது.
இறுதி முடிவை என்பிசிஐ தலைமையிலான யுபிஐ மற்றும் சேவைகள் ஸ்டீயரிங் கமிட்டி எடுக்கும். மசோதா நாடாளுமன்றத்தில் முழுமையாக நிறைவேறிய பிறகே நடவடிக்கைகள் தொடங்கும். மழைக்கால கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக விவாதம் பாதிக்கப்பட்டதாகவும், நாடாளுமன்றத்தில் விவாதிக்க தயாராக இருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார். யுபிஐயின் நிலைத்தன்மைக்கும் பாதுகாப்பான எதிர்காலத்திற்கும் இந்த நடவடிக்கை உதவும் என்பதே அரசின் நிலைப்பாடு.
