சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு நேரில் செல்லாமல் எப்போது வேண்டுமானாலும் இணையவழியாக ஆவணங்களை பதிவு செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆவணப் பதிவு சேவைகளை முழுமையாக டிஜிட்டல் மயமாக்கும் நோக்கில், இணையவழி “வருகை இல்லா ஆவணப்பதிவு” (Anywhere Registration) முறையை விரைவில் கட்டாயமாக்க தமிழக பதிவுத்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதுதொடர்பாக பதிவுத்துறைத் தலைவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பொதுமக்கள் சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு நேரில் செல்லாமல், தாங்களே இணையத்தின் மூலம் ஆவணங்களை பதிவு செய்யும் வசதி ஏற்கனவே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய முறையின் மூலம் ஆண்டின் அனைத்து நாட்களிலும், எந்த நேரத்திலும், எங்கிருந்தும் இணையதளத்தை பயன்படுத்தி ஆவணங்களை பதிவு செய்ய முடியும். ஆவணங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டு, சார்பதிவாளரால் சரிபார்க்கப்பட்டு ஒப்புதல் வழங்கப்பட்டதும், மின்னணு கையொப்பத்துடன் கூடிய பதிவு செய்யப்பட்ட ஆவணம் சம்பந்தப்பட்ட நபரின் உள்நுழைவு கணக்கிற்கும், அவர்களின் வாட்ஸ்அப் எண்ணிற்கும் அனுப்பி வைக்கப்படும். பின்னர் பயனாளர்கள் அந்த ஆவணங்களை நேரடியாக பதிவிறக்கம் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம்.

முதல் கட்டமாக சில குறிப்பிட்ட ஆவணங்களுக்கு இந்த முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. புதிய மனை விற்பனை ஆவணங்கள், புதிய அடுக்குமாடி குடியிருப்பு விற்பனை ஆவணங்கள், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் விற்பனை ஆவணங்கள், வங்கிக் கடன்களுக்கான அடமானப் பத்திரங்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய இரசீது ஆவணங்கள் ஆகியவை இணையவழி பதிவு செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளன.

பொதுமக்கள், கட்டுமான நிறுவனங்கள், ஆவண எழுத்தர்கள், வழக்கறிஞர்கள் மற்றும் வங்கிகள் ஆகியோர் பதிவுத்துறை இணையதளத்தில் தனிப்பட்ட உள்நுழைவு கணக்கை உருவாக்கி ஆவணங்களைத் தயாரித்து சமர்ப்பிக்கலாம். மேலும், ஆவணத்தில் இடம்பெறும் தரப்பினர்கள் மற்றும் சாட்சிகள் அனைவரின் ஆதார் விவரங்களும் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும். அடையாள சரிபார்ப்புக்காக ஆதார் அமைப்பின் மூலம் கைரேகை அல்லது கருவிழி பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இந்த சேவையை பயன்படுத்த இணைய இணைப்பு, UIDAI அங்கீகாரம் பெற்ற எல்-1 தர விரல் ரேகை கருவி, கருவிழி பதிவு சாதனம் மற்றும் இணையக் கேமரா போன்ற தொழில்நுட்ப வசதிகள் தேவைப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சந்தேகங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள்:-

அரசின் டிஜிட்டல் நிர்வாக முயற்சியின் ஒரு பகுதியாக அமையும் இந்த திட்டம், பதிவு அலுவலகங்களில் மக்கள் கூட்டத்தை குறைப்பதுடன், ஆவணப் பதிவு செயல்முறையில் வெளிப்படைத்தன்மை, வேகம் மற்றும் எளிமையை அதிகரிக்கும் என பதிவுத்துறை அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

 

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version