தமிழக பட்ஜெட் தொடரை முன்னிட்டு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி தலைமையில் திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் காணொலி வாயிலாக இன்று நடைபெற உள்ளது.
தமிழகத்தில் 2026-27ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட் ஆகஸ்ட் 5-ம் தேதியும், வேளாண் பட்ஜெட் ஆகஸ்ட் 6-ம் தேதியும் தாக்கல் செய்யப்பட உள்ளன. இந்நிலையில், பட்ஜெட் கூட்டத்தொடரில் பிரதான எதிர்க்கட்சியான திமுக உறுப்பினர்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்து ஆலோசிப்பதற்காக, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி தலைமையில் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் இன்று (ஜூலை 28) மாலை 5 மணிக்குக் காணொலிக் காட்சி வாயிலாக நடைபெறுகிறது.
திமுக சட்டமன்றக் கொறடா எ.வ.வேலு வெளியிட்ட அறிக்கையில், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் ஜூலை 28 மாலை 5 மணிக்குக் காணொலி மூலம் நடைபெறும். திமுக எம்எல்ஏக்கள் அனைவரும் தவறாது கலந்துகொள்ள வேண்டும்” என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
பட்ஜெட் கூட்டத்தொடரின் போது அரசுக்கு எதிராக எந்தெந்தப் முக்கியப் பிரச்சினைகளை முன்னெடுக்க வேண்டும், சட்டப்பேரவை விவாதங்களில் யார் யார் பேச வேண்டும் மற்றும் நிதிநிலை அறிக்கை சார்ந்த கருத்துக்கள் குறித்து இக்கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

