ஈரான் மீதான ராணுவத் தாக்குதல்களைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப், ராஜதந்திர பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்தால் மீண்டும் கடுமையான ராணுவ நடவடிக்கை எடுக்கப்படும் என புதிய எச்சரிக்கை விடுத்துள்ளார். ‘ஆக்ஸியோஸ்’ ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் அவர் இதனைக் குறிப்பிட்டார்.
ஈரான் நாட்டுடன் தற்போது மிக தீவிரமான பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாக டிரம்ப் உறுதிப்படுத்தினார். ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறப்பது மற்றும் விரிவான அணுசக்தி ஒப்பந்தம் குறித்து இதில் கவனம் செலுத்தப்படுகிறது.
ஓமன் நாட்டின் தலைமையில் இந்தப் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. மேலும் கத்தார், பாகிஸ்தான், எகிப்து நாடுகளுடன் டிரம்ப்பின் சிறப்புத் தூதர்கள் ஸ்டீவ் விட்காஃப் மற்றும் ஜாரெட் குஷ்னர் ஆகியோரும் இதில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
பேச்சுவார்த்தைகளுக்கு எவ்வளவு காலம் அவகாசம் அளிக்கப்படும் என்ற கேள்விக்கு பதிலளித்த டிரம்ப், அதிக நேரமில்லை, பேச்சுவார்த்தை விரைவில் சுமுகமாக முடிய வேண்டும் அல்லது முற்றிலும் முறிய வேண்டும் என்று கூறி, ராஜதந்திரத்திற்கு குறைந்த அளவே அவகாசம் உள்ளது என்பதை தெளிவுபடுத்தினார்.
பிராந்திய நாடுகளின் மத்தியஸ்த வேண்டுகோளை ஏற்று, கடந்த வெள்ளிக்கிழமை திட்டமிடப்பட்டிருந்த வான்வழித் தாக்குதல்களைத் தற்காலிகமாக நிறுத்தி வைக்க ஒப்புக்கொண்டதாக டிரம்ப் தெரிவித்தார்.
இதற்கிடையில், வடக்கு ஈராக்கின் எர்பில் நகரில் அமைந்துள்ள அமெரிக்கத் தூதரகப் பகுதி அருகே செவ்வாய்க்கிழமை அதிகாலை தொடர்ச்சியான குண்டுவெடிப்புகள் நிகழ்ந்தன. ஈரானிய ட்ரோன்கள் இப்பகுதியில் உள்ள பல இடங்களை குறிவைத்துத் தாக்குதல் நடத்தியுள்ளதாக அல்-ஜசீரா செய்தி நிறுவனம் காவல்துறை மூலமாகத் தெரிவித்துள்ளது.
இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து இப்பகுதியில் பெரும் தீ விபத்துகள் ஏற்பட்டதோடு, நிலைமையை சமாளிக்க பத்துக்கும் மேற்பட்ட அமெரிக்கப் போர் விமானங்களும் ட்ரோன்களும் எர்பில் நகருக்கு மேல் பறந்து ரோந்து பணியில் ஈடுபட்டு வருவதாகக் கூறப்படுகிறது.
