பெருநகர சென்னை மாநகராட்சியின் நிதிப் பத்திரங்கள் தேசிய பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ளன. வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த இம்முயற்சி, பொருளாதார நிபுணர்களால் வரவேற்கப்பட்டு வரும் நிலையில், இவற்றை வாங்கலாமா? வேண்டாமா என்பதை சில அடிப்படைக் கேள்விகளுடன் அணுகலாம்.
தமிழக வரலாற்றில் முதன்முறையாக சென்னை மாநகராட்சியின் நிதிப் பத்திரங்கள் தேசிய பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ளன. நவீன வழிமுறைகள் மூலம் மாநகராட்சிக்கு நிதி திரட்டும் முன்னெடுப்பாகப் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. இதை நேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மணி அடித்துத் தொடங்கி வைத்தார். இதன் மூலம் நகராட்சிப் பணிகளுக்காக நிதி திரட்டப்படும் எனக் கூறப்படுகிறது.
நகராட்சி நிதிப்பத்திரங்கள் என்றால் என்ன?
நகராட்சிகளின் உட்கட்டமைப்புத் திட்டங்கள் உள்ளிட்ட பணிகளுக்காக நிதி திரட்டும் நோக்கில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் வெளியிடும் நிதிப் பத்திரங்களே நகராட்சிப் பத்திரங்கள் ஆகும். இவை அந்த நகராட்சியின் நிதி செயல்திறனைப் பொறுத்து பங்குச் சந்தையில் மதிப்பைப் பெறுகின்றன. நகராட்சிகளின் நிதி சுயாட்சியை மேம்படுத்தி, நிதி வெளிப்படைத் தன்மையையும் பராமரிக்கிறது.
நகராட்சிப் பத்திரங்கள் மூலம் நிதிதிரட்ட மாநில அரசுக்கு உரிமை உண்டா?
இந்திய அரசியலைப்பின்படி தேசிய, மாநில மற்றும் நகராட்சி அளவில் நிதிப்பத்திரங்களை வெளியிட உரிமைகள் உண்டு. முதன்முதலில் 1997-ம் ஆண்டு கர்நாடக மாநிலம் பெங்களூருவின் நகராட்சிப் பத்திரங்கள், பொது முதலீட்டுக்கு வெளியிடப்பட்டன. அதன் மூலம் ரூ.125 கோடிக்கு நிதி திரட்டப்பட்டது. தற்போது நாடு முழுவதும் 13 மாநகராட்சிகளின் நிதிப்பத்திரங்கள் வெளியிடப்பட்டு, பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ளன. இந்தூர், புனே, ராஜ்கோட், ஐதராபாத், அகமதாபாத், வாரணாசி, லக்னோ என்று நீளும் அப்பட்டியலில் சென்னையும் சேர்ந்திருக்கிறது.
நகராட்சிப் பத்திரங்களின் நம்பகத்தன்மை எப்படி?
நகராட்சிப் பத்திரங்களில் முதலீடு செய்வது பாதுகாப்பு மற்றும் வெளிப்படைத் தன்மை நிறைந்ததாகவே கூறப்படுகிறது. நகராட்சிப் பத்திரங்களுக்காகவே தேசிய பங்குச்சந்தை தனித்துவமான தளத்தை உருவாக்கி, செயல்பாடுகள் எளிமையாக்கப்பட்டுள்ளன. நடப்பாண்டு நிதிநிலை அறிக்கையிலும் நகராட்சிப் பத்திரங்களின் முக்கியத்துவம் குறிப்பிடப்பட்டது. வளர்ந்து வரும் நகர்ப்புற உள்கட்டமைப்புத் தேவைகளைப் பூர்த்தி செய்ய 2036-ம் ஆண்டுக்குள் இந்தியாவுக்கு சுமார் ரூ.70 லட்சம் கோடி தேவைப்படும் என்று உலக வங்கி மதிப்பிட்டுள்ளது.
முதலீட்டில் ஏதும் சிக்கல் உள்ளதா?
நம் நாட்டின் நகராட்சி பத்திர சந்தையில் பணப்புழக்கம், விழிப்புணர்வு இன்மை மற்றும் மாநில உத்தரவாதங்கள் இல்லாததால், குறிப்பாக சிறிய உள்ளூர் அமைப்புகள் முதலீட்டாளர்களை ஈர்ப்பதில் சிக்கல் தொடர்ந்து நீடித்து வருகிறது. கடந்தாண்டு ஏப்ரல் நிலவரப்படி இந்தியாவில் உள்ள 11 நகராட்சிகள் இத்தகைய பத்திரங்கள் மூலம் ரூ. 2,683.9 கோடி நிதி மட்டுமே திரட்டியுள்ளதாக செபி தெரிவித்திருக்கிறது. மக்களிடையே போதிய விழிப்புணர்வு இல்லாததே நகர்ப்புற பத்திரங்களின் சிக்கல் என்று பார்க்கப்படுகிறது. முந்தைய காலங்களில் மாநில அரசுகளின் முழு அங்கீகாரம் இல்லாததும் அதிக முதலீட்டாளர்கள் இல்லாத நிலையை உருவாக்கியது. ஆனால் அந்நிலை தற்போது மாற்றப்பட்டுவிட்டது.
நகராட்சிப் பத்திரங்கள் மூலம் தமிழ்நாடு அரசின் திட்டம் என்ன?
பெருநகர சென்னை மாநகராட்சியின் நிதிப் பத்திரங்கள், 10 ஆண்டு காலத்திற்கு ரூ. 200 கோடி அளவில் திரட்டப்பட்டுள்ளது. இவற்றை தேசிய பங்குச் சந்தையில் தமிழ்நாடு அரசு பட்டியலிட்டுள்ளது. அடிப்படை வெளியீட்டுத் தொகையான ரூ.100 கோடியை விட 4.21% மக்கள் இவற்றை பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிதியைக் கொண்டு கொசஸ்தலை ஆற்றுப் படுகையில் ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால் கட்டமைப்பை அமைக்கப் பயன்படுத்தப் போவதாக அரசு தெரிவித்துள்ளது.
நகராட்சிப் பத்திரங்கள் பயனுள்ளதா? பாதுகாப்பானதா?
பெருநகர சென்னை மாநகராட்சியின் நிதிப்பத்திரங்களுக்கு இந்தியா ரேட்டிங்க்ஸ் மற்றும் அக்யூட் ரேட்டிங்க்ஸ் ஆகிய நிறுவனங்கள் ஏஏ+ தர மதிப்பீட்டைக் கொடுத்துள்ளது. இது சென்னை மாநகராட்சியின் நிதி மேலாண்மை சீராக இருப்பதைக் காட்டுவதாக அரசு குறிப்பிட்டுள்ளது. இந்த நிதிப் பத்திரங்களை வாங்கியவர்களுக்கு பிக்சட் டெபாசிட் முதலீடுகளுக்கு வழங்கப்படும் வட்டியை விட அதிக அளவான 7.97% வழங்கப்படுவதாகக் கூறப்படுகிறது.
ஒரு டிரில்லியன் பொருளாதார இலக்கு என்ன ஆனது?
தமிழ்நாட்டை ஒரு டிரில்லியன் டாலர்கள் பொருளாதாரம் ஈட்டும் மாநிலமாக 2030-க்குள் மாற்றுவதே திமுக அரசின் இலக்கு என்று அண்மையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். பெருநகர சென்னை மாநகராட்சியும் ரூ.250 கோடி நிதிப்பற்றாக்குறையில் செயல்பட்டு வருவதாகத் தெரிய வருகிறது. இந்நிலையில், ரூ.200 கோடி ரூபாய்க்கு நிதிப்பத்திரங்கள் வெளியிடப்பட்டுள்ளது, அடுத்து வரும் 10 ஆண்டுகளில் நகராட்சியில் முதலீடுகளை உயர்த்தும், நிதியை அதிகளவில் திரட்டும் என்று கூறப்படுகிறது. கொசஸ்தலை ஆற்றுப் படுகை மழைநீர் வடிகால் திட்டம் என்ற குறிப்பிட்ட ஒரு திட்டத்திற்காக திரட்டப்படும் நிதி, ஒரு டிரில்லியன் பொருளாதார இலக்கை நோக்கிய படியாகவே பார்க்க வேண்டும் என்கின்றனர் பொருளாதார நிபுணர்கள்.
