பேரவை தலைவர் ஜே.சி.டி. பிரபாகரை வாழ்த்தி அனைத்து கட்சிகளின் சார்பில் உள்ள உறுப்பினர்கள் பேசி வருகின்றனர். அந்தவகையில், புதிய சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகரை வாழ்த்திப் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், தனது உரையைத் தொடங்கும் முன் மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி மற்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோருக்கு நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

தனது உரையில் ஒரு சுவாரசியமான தகவலைப் பகிர்ந்த உதயநிதி, “சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர், முதல்வர் விஜய் மற்றும் நான் என மூவருமே ஒரே கல்லூரியில்   பயின்றவர்கள்” என்று குறிப்பிட்டார். இந்தத் தகவல் அவையில் ஒரு கலகலப்பான சூழலை உருவாக்கியது. “நாங்கள் அனைவரும் ஒரே கல்லூரியில் படித்தவர்களாக இருக்கலாம், ஆனால் இந்தப் பேரவையைப் பொறுத்தவரை நான் சார்ந்திருக்கும் திமுக தான் மிகவும் சீனியர்” என்று அவர் குறிப்பிட்டார்.

மேலும் பேசிய அவர், “அரசியல் அனுபவமும், அறிவும் அதிகம் கொண்டவர்கள் திமுகவினர். மாநிலத்தின் நலனே மிக முக்கியம் என்பதால், எங்களது நீண்டகால அரசியல் அனுபவங்களை அவையில் பகிர்ந்து கொள்ள சபாநாயகர் போதிய வாய்ப்பளிக்க வேண்டும்” என்று கோரிக்கை விடுத்தார். ஆளுங்கட்சிக்குச் சவால் விடும் வகையிலும், அதே சமயம் ஆக்கபூர்வமான விவாதங்களுக்குத் தயார் என்ற ரீதியிலும் அமைந்த உதயநிதியின் இந்தப் பேச்சு சட்டமன்றத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது.

தொடர்ந்து, சட்டப்பேரவையில் அனைவருக்கு சமமான வாய்ப்பளிக்கும் அன்னையாக சபாநாயகர் JCD பிரபாகர் செயல்பட வேண்டும் என பிரேமலதா வலியுறுத்தினார். ஆளுங்கட்சி, மட்டுமின்றி, பேரவையின் முழு நிகழ்வையும் ஒளிபரப்ப வேண்டும் என்றார். எதிர்க்கட்சிகள், எதிரிக்கட்சிகள் அல்ல என்பதை எடுத்துக்காட்டும் வகையில், அனைத்து எதிர்க்கட்சி தலைவர்களையும் நேரில் சென்று சந்தித்த CM அன்பு தம்பி விஜய்க்கும் வாழ்த்து தெரிவிப்பதாக கூறினார்.

சட்டப்பேரவையில் பேசுவதற்கு வாய்ப்பளித்த ராமதாஸுக்கு நன்றி தெரிவிப்பதாக செளமியா அன்புமணி கூறியது கவனம் பெற்றுள்ளது. சபாநாயகர் பழுத்த சமூகநீதி பின்னணியில் வளர்ந்தவர் என்பதால் ஜனநாயக முறைப்படி இந்த பேரவை நடக்கும் என்பதில் தங்களுக்கு எந்த ஐயமுமில்லை என்றார். வரலாற்று சிறப்புமிக்க இந்த அவையில் பணியாற்றுவதை மிகுந்த பெருமையாகவும், பாக்கியமாகவும், வரமாகவும் கருதுகிறோம் எனவும் தெரிவித்தார்.

 

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version