கொல்லூர் மூகாம்பிகை கோவில் நிர்வாகம் சார்பில் முதலமைச்சர் விஜய்க்கு பூரண கும்ப மரியாதை வழங்கப்பட்டது.

டெல்லியில் நேற்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்ற தமிழ்நாடு முதலமைச்சர் விஜய், இன்று கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற கொல்லூர் மூகாம்பிகை அம்மன் கோயிலுக்கு சிறப்பு தரிசனம் செய்தார். நிதி ஆயோக் ஆலோசனைக் கூட்டம் முடிந்ததும் டெல்லியில் தங்கியிருந்த முதலமைச்சர், இன்று மதியம் தனி விமானம் மூலம் மங்களூர் விமான நிலையத்துக்கு வந்தடைந்தார். அங்கிருந்து சுமார் 140 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கொல்லூர் செல்லும் பாதையில் கார் மூலம் பயணித்தார்.

மூகாம்பிகை அம்மன் கோயிலைச் சென்றடைந்த முதலமைச்சருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் பூரண கும்ப மரியாதை வழங்கி உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அவர் அம்மன் சன்னதியில் சிறப்பு தரிசனம் செய்து, பிரார்த்தனை நடத்தினார். தரிசனம் முடிந்ததும் முதலமைச்சர் விஜய் மங்களூர் விமான நிலையம் திரும்பி, அங்கிருந்து தனி விமானம் மூலம் சென்னை புறப்பட்டுச் செல்ல உள்ளார். இந்தப் பயணத்தையொட்டி தமிழக போலீசார் கர்நாடக போலீசாருக்கு சிறப்பு கோரிக்கை விடுத்திருந்தனர்.

அதன்படி உடுப்பி மாவட்ட போலீசார் கோயில் வளாகம், சுற்றுப்பகுதிகள் மற்றும் பயணப் பாதையில் பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்தினர். முதலமைச்சர் பயணிக்கும் சவுபர்ணிகா ஆற்றின் நீர்ப்பிடிப்புப் பகுதி அருகிலுள்ள அடர்ந்த வனப்பகுதியில் சந்தேகத்திற்குரிய நபர்களின் நடமாட்டத்தை உன்னிப்பாக கண்காணிக்க வனத்துறை ஊழியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. விமான நிலையம், கோயில் அணுகு பாதைகள் உள்ளிட்ட இடங்களில் வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

கொல்லூர் மூகாம்பிகை கோயில் தென்னிந்தியாவின் மிக முக்கிய சக்தி பீடங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. கர்நாடகம், தமிழ்நாடு, கேரளம், ஆந்திரா உள்ளிட்ட பல மாநிலங்களைச் சேர்ந்த பக்தர்கள் இங்கு தொடர்ந்து வருகை தருகின்றனர். அரசியல் தலைவர்கள் மத்தியில் இந்தக் கோயிலுக்கு சிறப்பு முக்கியத்துவம் உண்டு. மறைந்த முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா உள்ளிட்டோர் இங்கு வந்து சிறப்பு பூஜைகள் நடத்தியுள்ளனர்.

ஆன்மிக அமைதி, ஜோதிட நம்பிக்கை மற்றும் அரசியல் ரீதியான சில மரபுகள் ஆகியவை அரசியல் பிரமுகர்களை இந்தக் கோயிலுக்கு இழுக்கும் முக்கிய காரணங்களாகக் கூறப்படுகின்றன. முதலமைச்சர் விஜயின் இந்தத் திடீர் தரிசனப் பயணம் அரசியல் மற்றும் பொது மக்கள் மத்தியில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version