ஈரானுக்கு எதிராக அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து தாக்குதல் நடத்தி வருவதால் மத்திய கிழக்கில் பெரும் பதற்றம் நிலவுகிறது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தொடுத்து வரும் தாக்குதலை தொடர்ந்து ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியிருப்பதால், இந்தியா உட்பட பல்வேறு நாடுகளுக்கு கச்சா எண்ணெய் விநியோகம் தடைபட்டுள்ளது.
இந்தியா குறுகிய காலத்திற்கு ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கிக் கொள்ள அமெரிக்கா அனுமதி அளித்துள்ளது. இந்தியாவிடம் போதுமான அளவு கச்சா எண்ணெய் மற்றும் எல்.பி.ஜி கையிருப்பு உள்ளதாக மத்திய அரசு தெரிவித்திருந்தது. இந்த நிலையில்,
நாடு முழுவதும் நள்ளிரவு முதல் சிலிண்டர் விலை அதிகரித்துள்ளது. வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ.115 உயர்ந்துள்ளது. அதனால் ரு.1,929க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த 19 கிலோ சிலிண்டர் தற்போது விலை உயர்வால் ரூ.2,043க்கு விற்பனையாகிறது. கடந்த மார்ச் 1-ம் தேதி வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ.30 அதிகரித்திருந்த நிலையில் 6 நாட்களில் மீண்டும் விலை உயர்ந்திருப்பதால், டீ முதல் சாப்பாடு வரை அனைத்தின் விலையும் உயர வாய்ப்புள்ளது. அதேப் போல,
வீட்டு பயன்பாட்டிற்கான 14.5கிலோ சிலிண்டர் விலை ரூ.60 அதிகரித்து ரூ.868லிருந்து ரூ.928க்கு விறனையாகிறது. இதனால் மக்கள் கலக்கத்தில் உள்ளனர். ஆறுதலான விஷயம் என்னவென்றால், பெட்ரோல், டீசல் விலையில் எவ்வித மாற்றமும் இல்லாமல், அதே விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
