இந்தியாவில் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வந்தது. கடைசியாக 2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுக்கப்பட்ட நிலையில், 2021-ம் ஆண்டு நடக்க இருந்த கணக்கெடுப்பு கொரோனா பரவலால் தள்ளி வைக்கப்பட்டது. எதிர்க்கட்சிகளின் தொடர் கோரிக்கையை ஏற்று நாடு முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும் என மத்திய அரசு கடந்தாண்டு ஜூன் மாதம் அறிவித்தது.
அதன்படி, கடந்தாண்டு டிசம்பர் மாதம் பிரதமர் மோடி தலைமையில் கூடிய கூட்டத்தில், மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027-ல் நடத்த ஒப்புதல் வழங்கப்பட்டது. இப்பணிகள் ரூ.11,718.24கோடியில் இருகட்டங்களாக நடத்தப்படும் என்றும், முதற்கட்ட கணக்கெடுப்பு இந்தாண்டு ஏப்ரலில் தொடங்கி செப்டம்பர் மாதத்திற்குள் முடிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்தது. இப்பணியில் 30 லட்சம் பணியாளர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
மத்திய அரசு உத்தரவுப்படி, தமிழகத்தில் நடைபெறும் மக்கள்தொகை கணக்கெடுப்பு குறித்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. அதன்படி, தமிழகத்தில் ஜூலை 17 முதல் ஜூலை 31-ம் தேதி வரை மக்கள் சுயமாக மக்கள்தொகை கணக்கெடுப்பு விவரங்களை இணையவழியில் பதிவிட வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
ஆக.1 முதல் 30-ம் தேதிக்குள் வீடுவீடாகச் சென்று கணக்கெடுப்பு பணி மேற்கொள்ளப்பட உள்ளது. இப்பணியில் அரசு ஆசிரியர்கள், களப்பணியாளர்கள், மாவட்டம், துணை மாவட்டம் மற்றும் மாநில அளவிலான பிற மக்கள்தொகை கணக்கெடுப்பு அதிகாரிகள் என சுமார் 1.20 லட்சம் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
தங்கள் வழக்கமான பணிகளுடன் கூடுதலாக மக்கள்தொகை கணக்கெடுப்பின் களப்பணியையும் செய்வார்கள். அதற்காக அவர்களுக்கு மதிப்பூதியமும் வழங்கப்பட உள்ளது.
இந்த கணக்கெடுப்பில், வீட்டுவசதி நிலை, வசதிகள் மற்றும் சொத்துகள், வீட்டு உறுப்பினர்கள் எண்ணிக்கை, மதம், எஸ்சி மற்றும் எஸ்டி, மொழி, எழுத்தறிவு மற்றும் கல்வி, பொருளாதார செயல்பாடு, இடம்பெயர்வு உள்ளிட்ட 33 கேள்விகளுடன் குறித்த தரவுகள் சேகரிக்கப்பட உள்ளன. டிஜிட்டல் மக்கள்தொகை கணக்கெடுப்புக்காக, மக்கள்தொகை கணக்கெடுப்பு மேலாண்மை மற்றும் கண்காணிப்பு அமைப்பு (சிஎம்எம்எஸ்)போர்டல் உருவாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
