கூட்டணியில் இருந்தால் அவர்களோடு, உடன் இல்லவிட்டால் அவர்கள் இல்லாமல், எதிர்த்தால் அவர்களையும் எதிர்த்து களம் காண்போம் என்று திமுக அமைப்பு செயலாளர் ஆர் எஸ் பாரதி தெரிவித்துள்ளார்.

திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் வீரபாண்டியன் கூட்டணியில் தற்போது இல்லை என்ற நிலைப்பாட்டை விளக்கிய அவர், அதை நிரந்தரமான முடிவாகக் கருத வேண்டாம் என்றும் தெளிவுபடுத்தினார். “கம்யூனிஸ்ட் தோழர்கள் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக திமுகவுடன் இணைந்து பணியாற்றியுள்ளனர். அவர்களுக்கு திமுக சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். பலமுறை நட்புடன் இருந்து, பிரிந்து சென்ற வரலாறு உண்டு. தற்போது கூட்டணி இல்லை என்பது தற்காலிக சூழல். எப்போதும் இல்லை என்று சொல்லவில்லை” என்று பாரதி கூறினார்.

மேலும், “உடன் இருந்தால் அவர்களுடன், இல்லாவிட்டால் அவர்கள் இல்லாமல், எதிர்த்தால் அவர்களையும் எதிர்த்து களத்தில் நிற்போம்” என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார். ஒரு நாளில் ஏற்பட்ட மனசங்கடம் குறித்து கம்யூனிஸ்ட் தோழர்களிடமே கேட்க வேண்டும் என்றும், யார் இருந்தாலும் இல்லாவிட்டாலும் திமுக கவலைப்படாது என்றும் வலியுறுத்தினார். 2017-ல் உருவான கூட்டணியில் இருந்த பல கட்சிகள் இப்போது வெளியேறும் நிலையில் திமுக தனித்து விடப்படுவதாக எழும் கேள்விக்கு பதிலளித்த பாரதி, “தனித்து நின்றாலும் திமுகவுக்கு தனிப்பெரும் பலம் உள்ளது. 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்டு வெற்றி பெற்று ஆட்சி அமைப்போம்” என்று உறுதியளித்தார்.

காங்கிரஸை “எக்ஸ்ட்ரா லக்கேஜ்” என்று வர்ணித்த அவர், கூட்டணி கட்சிகளுக்கு தகுந்த மரியாதை கொடுக்கப்பட்டதற்கு “தகைசால் தமிழர்” விருது சான்று என்றார். ஆனால் தேர்தல் முடிந்ததும் சிலர் தங்கள் உண்மையான நிறத்தை வெளிப்படுத்துவதாக விமர்சித்தார். கூட்டணியில் இருந்து வெளியேறுபவர்களை நோக்கி கேள்விகளை எழுப்பிய பாரதி, “ஒரு மாதத்தில் இந்த அரசு என்ன மாற்றம் செய்தது? திமுக என்ன தவறு செய்தது?” என்று வினவினார். கொள்கை அடிப்படையில் கூட்டணிக்கு வந்தவர்களின் கொள்கையே இப்போது கேள்விக்குறியாக இருப்பதாகவும், மக்கள் “யார் சோற்றில் மண் அள்ளிப் போட்டது?” என்று கேட்கும் நிலை உருவாகியுள்ளதாகவும் சுட்டிக் காட்டினார்.

மின்வெட்டு பிரச்னையைப் பொருத்தவரை, “இது செயற்கையானதா? திட்டமிட்ட சதியா?” என்ற சந்தேகத்தை எழுப்பிய அவர், “சினிமா காட்சி போல இல்லாத மின்வெட்டை உருவாக்கி, ஒரே மாதத்தில் நிவர்த்தி செய்ததாகக் கூறும் வேலை நடக்கிறது எனத் தோன்றுகிறது. கடந்த ஐந்து ஆண்டுகளில் இதைவிடக் கடுமையான வெயில் இருந்தபோதும் இத்தகைய மின்வெட்டு ஏற்படவில்லை” என்றார். பெண்கள் பாதுகாப்பு விவகாரத்தில், முன்னாள் முதலமைச்சர் கலைஞர் பெண்கள் காவல்துறைப் பிரிவை உருவாக்கியதை நினைவுகூர்ந்த பாரதி, அதன் தொடர்ச்சியாக “சிங்கப்பெண் படை” உருவாக்கப்பட்டதை சுட்டினார்.

சட்டம் ஒழுங்கு மற்றும் பெண்கள் பாதுகாப்புக்கு காவல்துறையுடன் தனிநபர் ஒழுக்கமும் முக்கியம் என்று வலியுறுத்தினார். தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார். தேர்தல் தொகுதி பங்கீடு நேரத்தில் கம்யூனிஸ்ட் கட்சிகள் அதிருப்தியாக இருந்திருந்தால் அப்போதே வெளியேறியிருக்கலாம் என்று கூறிய பாரதி, காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்ட 28 தொகுதிகளில் அவர்கள் தனித்து போட்டியிட்டிருந்தால் சுமார் 15 இடங்களில் வெற்றி பெற்றிருக்கலாம் என்றும், அவ்வாறு நடந்திருந்தால் தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களைப் பெற்றிருக்காது என்றும் வாதிட்டார்.

“தகைசால் தமிழர்” விருது கூட்டணித் தலைவர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டது, திமுக தலைவர்களுக்கு அல்ல என்றும் தெரிவித்தார். ஸ்ரீவைகுண்டம் பெண்ணுக்கு ஏற்பட்ட சம்பவத்தில் தமிழக வெற்றிக் கழக எம்எல்ஏ சரவணன் பெயர் சொல்லப்படுவது குறித்த கேள்விக்கு, “சட்டப்படி முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும். உதயநிதி ஸ்டாலின் அதற்கான அனைத்து முயற்சிகளையும் எடுப்பார். திமுக அவருக்கு உடன் நிற்கும்” என்று உறுதியளித்தார். திமுக தனது அடிப்படை பலத்துடன் மக்கள் பிரச்னைகளை தீர்க்கும் பாதையில் உறுதியாக நடைபோடும் என்ற செய்தியுடன் ஆர்.எஸ். பாரதியின் பேட்டி முடிவடைந்தது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version