ஈரானின் உச்சத் தலைவராக பல ஆண்டுகள் பதவி வகித்த அயதுல்லா அலி கமேனியின் இறுதிச் சடங்குகள் தொடங்கியுள்ள நிலையில், தலைநகர் தெஹ்ரான் முழுவதும் பெரும் பரபரப்பு நிலவுகிறது. லட்சக்கணக்கான மக்கள் திரண்டு அஞ்சலி செலுத்தி வரும் இந்த ஊர்வலங்கள் ஜூலை 9 வரை நாட்டின் பல்வேறு நகரங்களில் தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த பிப்ரவரி மாத இறுதியில் அமெரிக்க தாக்குதலில் உயிரிழந்த கமேனியின் உடல் நான்கு மாதங்களுக்குப் பிறகு இப்போது பொதுமக்களுக்கு அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இதனால் ஈரான் முழுவதும் இரங்கல் அலைகள் எழுந்துள்ளன. உயர் மட்ட அதிகாரிகள், அரசியல் தலைவர்கள் மற்றும் கமேனியின் மூன்று மகன்களும் இறுதிச் சடங்கில் பங்கேற்றுள்ளனர். எனினும், புதிய உச்சத் தலைவராக நியமிக்கப்பட்ட மொஜ்தபா கமேனி இதுவரை பொதுமக்கள் முன்னிலையில் தோன்றவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெளியிட்ட ஒரு கருத்து ஈரானை கடும் கோபத்திற்கு உள்ளாக்கியுள்ளது. “ஈரான் தலைவர்கள் அனைவரும் கமேனியின் இறுதிச் சடங்கில் ஒன்று திரண்டுள்ளனர். ஒரே ஒரு துப்பாக்கிக் குண்டில் அனைவரையும் வீழ்த்திவிடலாம்” என்று டிரம்ப் கூறியிருந்தார். மேலும், “அப்படி செய்தால் பேச்சுவார்த்தைக்கு யாரும் இருக்க மாட்டார்கள்” எனக் கூறி, தற்போது நடைபெற்று வரும் போர் நிறுத்தம் மற்றும் அமைதிப் பேச்சுவார்த்தைகளைப் பற்றியும் குறிப்பிட்டார்.

ஈரான் இந்த மிரட்டல் பேச்சுக்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்துள்ளது. “மக்களை கொல்லலாம், ஆனால் சித்தாந்தத்தை வீழ்த்த முடியாது. நீங்கள் பெர்ஃப்யூம் பாட்டிலை உடைத்தால் அதன் வாசனை எல்லா இடங்களிலும் பரவும். உங்களுக்கு நாகரீகம், வரலாறு அல்லது பெருமை எதுவும் தெரியாது” என்று ஈரான் தரப்பில் காட்டமாக பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க தாக்குதலுக்குப் பிறகு இரு நாடுகளுக்கும் இடையே போர் மூண்டது. தற்போது முதல் கட்ட போர் நிறுத்தம் அமலில் உள்ள நிலையில், அமைதிப் பேச்சுகள் தொடங்கியுள்ளன. கமேனியின் இறுதிச் சடங்கு முடியும் வரை பேச்சுவார்த்தைகளுக்கு சிறிது இடைவெளி விடப்பட்டுள்ளது. இந்தப் புதிய வார்த்தைப் போர் இரு தரப்பு உறவுகளிலும் மீண்டும் பதற்றத்தை அதிகரித்துள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version