கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் காட்பாடி தொகுதியில், முன்னாள் அமைச்சர் துரைமுருகன் வெற்றியை எதிர்த்து தாக்கல் செய்த தேர்தல் வழக்கு செல்லத்தக்கதல்ல எனக் கூறி தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கடந்த 2021ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் காட்பாடி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட அக்கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன், அதிமுக வேட்பாளர் வி.ராமுவை விட 746 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றிபெற்றார்.
இதையடுத்து, வாக்கு எண்ணிக்கை முறையாக நடைபெறவில்லை என குற்றம்சாட்டி, துரைமுருகனின் வெற்றியை செல்லாது எனவும், தன்னை வெற்றிபெற்றவராகவும் அறிவிக்கக் கோரி அதிமுக வேட்பாளர் வி.ராமு 2021ல் தேர்தல் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
ராமு தாக்கல் செய்த தேர்தல் வழக்கை நிராகரிக்க வேண்டும் என்று துரைமுருகன் தரப்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த வழக்கை நீதிபதி ஜி.கே.இளந்திரையன் விசாரித்தார். துரைமுருகன் தரப்பில், 16வது சட்டமன்றத்தின் பதவிக்காலம் முடிவடைந்து, 17 சட்டமன்றம் அமைந்துவிட்ட நிலையில், வாக்குக்கு பணம் கொடுத்தது உள்ளிட்ட ஊழல் குற்றச்சாட்டுகள் கூறப்படாத நிலையில், உச்ச நீதிமன்ற உத்தரவின் படி, பதவிகாலம் முடிந்துவிட்ட நிலையில், ஊழல் குற்றச்சாட்டுகள் கூறப்படாத நிலையில், இந்த வழக்கு செல்லத்தக்கதல்ல என வாதிடப்பட்டது.
அதிமுக வேட்பாளர் ராமு தரப்பில், 2016ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அதிமுக வேட்பாளர் இன்பதுரை வெற்றிபெற்றதை எதிரித்து திமுக வேட்பாளர் அப்பாவு தாக்கல் செய்த தேர்தல் வழக்கில் சமீபத்தில் வெளியான தீர்ப்பை சுட்டிக்காட்டி, பதவிக்காலம் முடிவடைந்துவிட்டதால் தேர்தல் வழக்கு செல்லக்கத்தக்கதல்ல என கூறமுடியாது என வாதிடப்பட்டது.
இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, தேர்தல் வழக்கை நிராகரிக்கக் கோரி திமுக முன்னாள் அமைச்சர் துரைமுருகன் தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை தள்ளிவைத்திருந்தார்.
இன்று இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி, அதிமுக வேட்பாளர் ராமு தேர்தல் வழக்கை நிராகரிக்க கோரிய மனுவை ஏற்று, துரைமுருகனுக்கு எதிரான தேர்தல் வழக்கு செல்லத்தக்கதல்ல எனக் கூறி, தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தார்.
