“என் இனிய தமிழ் மக்களே” என்ற அவரது குரல் சினிமா உள்ள வரை நிலைத்திருக்கும் என பாரதிராஜாவுக்கு புகழாரம் சூட்டினார் முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார்.

தேனி மாவட்டம் தேவதானப்பட்டி அருகே காட் ரோடு பகுதியில் அமைந்துள்ள முன்னாள் இயக்குநர் பாரதிராஜாவின் பண்ணை வீட்டில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு அதிமுக சார்பில் பெரும் அஞ்சலி செலுத்தப்பட்டது. முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தலைமையில் அதிமுக மாவட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அவரது உடலுக்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.

அஞ்சலி செலுத்திய பின்னர் பாரதிராஜாவின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்த ஆர்.பி. உதயகுமார், செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர், “கிராமத்தின் கலாச்சாரத்தையும், பண்பாட்டையும் தமிழ் சினிமாவுக்கு அறிமுகப்படுத்தி, கலைத்துறையில் புதிய நுழைவாயிலை திறந்து வைத்தவர் பாரதிராஜா. அவரது இழப்பு தமிழ் திரையுலகத்திற்கு மட்டுமல்ல, எல்லா தரப்பு மக்களின் நெஞ்சிலும் பேரிடியாக விழுந்துள்ளது. அவரது படைப்புகள் எப்போதும் நிலைத்திருக்கும்” என்று வருத்தம் தெரிவித்தார்.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிச்சாமியின் உத்தரவின் பேரில் தேனி மாவட்ட அதிமுக நிர்வாகிகளுடன் இந்த அஞ்சலி நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டதாகவும் உதயகுமார் குறிப்பிட்டார். “கலைத்துறையில் ஒரு புதிய அத்தியாயத்தை தொடங்கி வைத்த பாரதிராஜாவுக்கு இறப்பு என்று இல்லை. அவரது பூத உடலுக்கு மட்டுமே இறப்பு. ‘என் இனிய தமிழ் மக்களே’ என்ற அவரது இனிய குரல் தமிழ் சினிமா உள்ளவரை என்றும் ஒலித்துக் கொண்டிருக்கும்” என்று உணர்ச்சி பொங்கக் கூறினார்.

பாரதிராஜா தமிழ் சினிமாவின் முன்னோடி இயக்குநர்களில் ஒருவர். கிராமிய வாழ்க்கை, விவசாயிகளின் போராட்டங்கள், இளைஞர்களின் கனவுகள், பெண்களின் வலிமை ஆகியவற்றை தன் படங்களின் மூலம் அழகாக வெளிப்படுத்தியவர். ‘16 வயதினிலே’, ‘கிழக்கே போகும் ரயில்’, ‘சிகப்பு ரோஜாக்கள்’ உள்ளிட்ட பல காலத்துக்கால படைப்புகளை வழங்கிய அவர், பல புதுமுகங்களை தமிழ் திரையுலகுக்கு அறிமுகம் செய்து வைத்ததன் மூலம் தன் பங்களிப்பை நிலைநாட்டினார். அதிமுக சார்பிலும், பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சார்பிலும் பாரதிராஜாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தியதாகவும், அவரது குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்ததாகவும் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் தேனி மாவட்ட அதிமுக பொறுப்பாளர்கள், நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர். தமிழ் சினிமாவின் மரபை பாதுகாத்து, புதிய பரிமாணத்தை அளித்த பாரதிராஜாவின் நினைவுகள் என்றும் தமிழ் மக்கள் மனதில் நிலைத்திருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அவரது மரணம் திரையுலகம் முழுவதும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், பல்வேறு அரசியல் கட்சிகள், திரைத்துறை பிரமுகர்கள், ரசிகர்கள் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version