திமுக முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரானார்.

போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பலரிடமும் பணம் பறித்த மோசடி வழக்கில் அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த இளஞ்செழியன் கைது செய்யப்பட்ட நிலையில், திமுகவின் முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் இன்று காவல்துறை விசாரணைக்கு ஆஜரானார். கடந்த 24-ம் தேதி சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் இளஞ்செழியனை கைது செய்தனர். ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளர் சீனிவாசன் அளித்த புகாரின் அடிப்படையில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டது.

புகாரில், இளஞ்செழியன் தன்னிடம் பணம் பெற்று வேலை வாங்கித் தருவதாகக் கூறியும், உறுதியளித்தும் ஏமாற்றியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மேலும், இந்த மோசடியில் முன்னாள் அமைச்சர் சிவசங்கருக்கும் தொடர்பு இருப்பதாக சீனிவாசன் தெரிவித்திருந்தார். இதனால் முதல் தகவல் அறிக்கையில் (எஃப்.ஐ.ஆர்.) சிவசங்கர் பெயரும் இடம் பெற்றது. இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் முன்னாள் அமைச்சர் சிவசங்கருக்கு சம்மன் அனுப்பி, இன்று விசாரணைக்கு ஆஜராகுமாறு உத்தரவிட்டனர்.

அதன்படி, இன்று காலை வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலக வளாகத்தில் செயல்படும் மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் சிவசங்கர் ஆஜரானார். அதிகாரிகள் அவரிடம் விரிவான விசாரணை நடத்தி, வாக்குமூலத்தைப் பதிவு செய்தனர். மோசடியில் அவருக்கு ஏதேனும் தொடர்பு உள்ளதா என்பது குறித்து தீவிரமாக கேள்விகள் எழுப்பப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதே வழக்கில் முக்கிய குற்றவாளியாகக் கருதப்படும் இளஞ்செழியனை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் மனு தாக்கல் செய்தனர்.

நேற்று இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, நீதிமன்றம் இளஞ்செழியனை வரும் 6-ம் தேதி வரை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி வழங்கியது. இதனைத் தொடர்ந்து போலீசார் அவரை அழைத்துச் சென்று தீவிர விசாரணையைத் தொடங்கியுள்ளனர். இந்த மோசடி சம்பவம் தமிழ்நாடு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பலரும் இளஞ்செழியன் மூலம் வேலைக்கு முயன்றதாகவும், பணம் இழந்ததாகவும் புகார்கள் எழுந்துள்ளன. மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கை முழுமையாக விசாரித்து, மேலும் சிலரை விசாரணை வளையத்திற்குள் கொண்டு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version