திருத்தணி அருகே ஆடுகளைச் சரியாக மேய்க்கவில்லை என்ற ஆத்திரத்தில், 15 வயது சிறுவனை அடித்துக் கொன்று பண்ணையிலேயே புதைத்த கொடூரச் சம்பவம் 4 மாதங்களுக்கு பின் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி எம்.ஜி.ஆர் நகரைச் சேர்ந்த பாலமுருகன் என்பவர், முருகம்பட்டு கிராமத்தில் குத்தகைக்கு எடுத்த நிலத்தில் கோழி, ஆடு, வாத்து பண்ணை நடத்தி வந்தார். இங்கு வேலை செய்வதற்காக வெண்ணிலா என்ற பெண், தனது மூன்று மகன்களுடன் கடந்த 6 மாதங்களாக அங்கேயே தங்கிப் பணிபுரிந்து வந்தார்.

கடந்த பிப்ரவரி மாதம் பண்ணை உரிமையாளர் பாலமுருகன் குடும்பத்துடன் சுற்றுலா சென்றுவிட்டு திரும்பியுள்ளார். அப்போது பண்ணையில் கோழிகள் குறைந்திருந்ததாலும், ஆடுகள் பக்கத்துத் தோட்டத்தில் மேய்ந்து பிரச்சினை ஏற்பட்டதாலும் வெண்ணிலாவின் மூத்த மகன் சுரேஷுடன் (15) தகராறு ஏற்பட்டுள்ளது.

இதில் ஆத்திரமடைந்த பாலமுருகனும், அவரது நண்பரான வினோத்தும் சேர்ந்து சிறுவன் சுரேஷை இரும்பு சுத்தியலால் கொடூரமாக அடித்துக் கொலை செய்துள்ளனர். பின்னர், உடலை யாருக்கும் தெரியாமல் பண்ணை நிலத்திலேயே சிமெண்ட் கற்களை வைத்துப் புதைத்துள்ளனர். இதற்கு பாலமுருகனின் மனைவி புவனேஸ்வரியும், அவரது 15 வயது மகளும் உடந்தையாக இருந்துள்ளனர்.

மகன் கொலை செய்யப்பட்ட அதிர்ச்சியில் இருந்த வெண்ணிலாவை, வினோத்தும் பாலமுருகனும் மிரட்டி அடைத்து வைத்துள்ளனர். “உன் மகன் இறந்துவிட்டான், அதற்குப் பதிலாக நான் உனக்கு மகனாக இருக்கிறேன்; உனக்கு புது வீடு கட்டித் தருகிறோம்” என்று ஆசை வார்த்தை கூறி வாயடைக்கச் செய்துள்ளனர். ஆனால், மூன்று மாதங்கள் கடந்தும் அவர்கள் வீடு கட்டிக் கொடுக்காமலும், பணம் தராமலும் ஏமாற்றியதால், வெண்ணிலா தப்பியோடி திருத்தணி காவல் நிலையத்தில் நள்ளிரவில் கதறியபடி புகார் அளித்தார்.

புகாரை அடுத்து, மொபைல் சிக்னலை வைத்து தலைமறைவாக இருந்த பாலமுருகன், புவனேஸ்வரி, வினோத் மற்றும் பாலமுருகனின் 15 வயது மகள் ஆகிய 4 பேரையும் கடம்பத்தூர் பகுதியில் போலீசார் அதிரடியாகக் கைது செய்தனர். இதில் 15 வயது சிறுமிக்கு நீதிமன்ற விதிகளின்படி ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவர்கள் காட்டிய அடையாளத்தின்படி, முருகம்பட்டு பண்ணை நிலத்தில் புதைக்கப்பட்ட சுரேஷின் உடல் 4 மாதங்களுக்குப் பிறகு தோண்டி எடுக்கப்பட்டது. திருவள்ளூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணையக் குழு செயலாளர்/நீதிபதி நளினி தேவி, பயிற்சி ஆட்சியர் பவித்ரா, வருவாய் கோட்டாட்சியர் கனிமொழி மற்றும் திருத்தணி ஏஎஸ்பி ஷீபன் திமான் ஆகியோர் முன்னிலையில் உடல் தோண்டப்பட்டது.

உடல் சிதைந்திருந்ததால், அரசு மருத்துவர்கள் அருண் கௌதமன், நரசிம்மன் தலைமையிலான குழுவினர் சம்பவ இடத்திலேயே 2 மணி நேரம் பிரேதப் பரிசோதனை செய்தனர். பின்னர் உடல் தாயிடம் ஒப்படைக்கப்பட்டு, திருத்தணியில் நல்லடக்கம் செய்யப்பட்டது. மாவட்ட எஸ்பி விவேகானந்த சுக்லா சம்பவ இடத்தை நேரில் ஆய்வு செய்து விசாரணை நடத்தினார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version