சென்னை சைபர் கிரைம் பிரிவு, பத்திரிகையாளர் நக்கீரன் கோபால் மீது அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் மற்றும் முதல்வர் விஜய் தொடர்பாக யூடியூப் சேனலில் அவர் வெளியிட்ட கருத்துகள் அவதூறானவை எனக் குற்றம்சாட்டப்பட்டு, வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2025 செப்டம்பர் 27ஆம் தேதி, கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரத்தில் தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவர் விஜய் தேர்தல் பரப்புரை நடத்தினார். அப்போது ஏற்பட்ட கடும் கூட்ட நெரிசலில் 11 குழந்தைகள் உள்பட 41 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உச்ச நீதிமன்ற உத்தரவின்படி சிபிஐ விசாரணை நடைபெற்று வருகிறது. திமுக தரப்பில், விஜய் மற்றும் தவெக நிர்வாகிகளே இந்த துயரத்திற்குப் பொறுப்பு என்ற குற்றச்சாட்டுகள் தொடர்ந்து வருகின்றன.

இந்தப் பின்னணியில், நக்கீரன் கோபால் ஒரு யூடியூப் விவாதத்தில் கடுமையான கருத்துகளைத் தெரிவித்தார். “கரூர் சம்பவத்தை அங்குலம் அங்குலமாகப் பேசியுள்ளேன். போதையில் ஒருவர் விழுந்ததால் குழந்தை இறந்தது. விஜய் பிரசார வாகனத்திலிருந்து குதித்து காப்பாற்றியிருக்க வேண்டும். ஆனால் அவர் அப்படிச் செய்யவில்லை. மேலும் ‘ஜனநாயகன்’ படத்திற்கான சூட்டிங் அங்கு நடந்ததாகத் தகவல் வெளியிட்டதால், அந்தக் காட்சியைப் படத்தில் சேர்க்கவில்லை” என்றார். தவெக தரப்பில் இக்குற்றச்சாட்டுகள் முற்றிலும் மறுக்கப்படுகின்றன. விஜய் தனது மேடைப் பேச்சுகளில், திமுகவினர் தம்மீது பழிபோடுவதாகக் குற்றம்சாட்டி வருகிறார்.

இதையடுத்து, நந்தகுமார் என்பவர் சென்னை சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். “நக்கீரன் கோபால் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்து முதல்வர் விஜய் மீது அவதூறு பரப்புகிறார். உடனடி நடவடிக்கை தேவை” என்று அதில் குறிப்பிட்டிருந்தார். இந்தப் புகாரின் அடிப்படையில், சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிவு செய்து, வீடியோ உள்ளடக்கம் மற்றும் சமூக ஊடகப் பதிவுகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

இந்த வழக்கு, கரூர் துயரம் தொடர்பான அரசியல் விவாதங்களையும், ஊடக சுதந்திரம் குறித்த விவாதங்களையும் மீண்டும் முன்னெடுத்துள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version