நாளை முதல் ஜூலை 31-ந் தேதி வரை என 52 நாட்கள் மீன்பிடி தடை காலம் தொடங்குகிறது.
கடல் மீன் வளத்தை பாதுகாப்பதற்கும், மீன்களின் இனப்பெருக்கத்தை ஊக்குவிப்பதற்கும் ஆண்டுதோறும் அமல்படுத்தப்படும் மீன்பிடித் தடை காலம் கேரளத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) முதல் தொடங்குகிறது. ஜூலை 31-ஆம் தேதி வரை மொத்தம் 52 நாட்கள் இந்தத் தடை அமலில் இருக்கும் என மீன்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவில் கடல் மீன் வளத்தை நீண்டகால அடிப்படையில் பாதுகாக்கும் நோக்கில் கடந்த 1988-ஆம் ஆண்டு முதல் பருவகால மீன்பிடித் தடை நடைமுறையில் உள்ளது. குறிப்பாக தென்மேற்கு பருவமழைக் காலம் அரபிக்கடலில் பல்வேறு மீன் இனங்கள் இனப்பெருக்கம் செய்யும் முக்கிய காலமாக கருதப்படுகிறது. இந்த காலகட்டத்தில் மீன்கள் ஆழ்கடல் பகுதிகளில் இருந்து கடற்கரை நோக்கி வந்து முட்டையிட்டு இனப்பெருக்கத்தில் ஈடுபடுகின்றன.
இத்தகைய சூழலில், எந்திரப் படகுகள் மற்றும் விசைப்படகுகள் மூலம் அதிகளவில் மீன்பிடி மேற்கொள்ளப்படும்போது தாய் மீன்கள் மற்றும் மீன் குஞ்சுகள் அதிகமாக சிக்கி அழிவதற்கான வாய்ப்பு உள்ளது. இதனால் எதிர்கால மீன் வளம் பாதிக்கப்படலாம். இதனைத் தடுக்கும் வகையிலேயே ஆண்டுதோறும் மீன்பிடித் தடை அமல்படுத்தப்படுகிறது.
தடை காலத்தில் எந்திரப் படகுகள் மூலம் கடலுக்குச் சென்று மீன்பிடிக்க அனுமதி இல்லை. குறிப்பாக கடலின் அடிப்பகுதியை சுரண்டும் வகையிலான வலைகள் பயன்படுத்தப்படுவது முழுமையாகத் தடுக்கப்படுகிறது. எனினும் பாரம்பரிய முறையில் மீன்பிடித்து வரும் சிறிய படகுகள் மற்றும் நாட்டு படகுகளுக்கு சில நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அவை கடல் எல்லையிலிருந்து 12 கடல் மைல் தூரம் வரை மீன்பிடிக்கலாம்.
மழைக்காலத்தில் இந்த 12 கடல் மைல் பரப்பே பல மீன் இனங்களின் இனப்பெருக்கப் பகுதியாக விளங்குகிறது. பெரிய எந்திரப் படகுகளின் செயல்பாடு கட்டுப்படுத்தப்படுவதன் மூலம் மீன்களின் இனப்பெருக்கம் இயல்பாக நடைபெற வழிவகை செய்யப்படுகிறது. இதன் மூலம் கடல் உயிரியல் சமநிலை பாதுகாக்கப்படுவதுடன், எதிர்காலத்தில் மீன் உற்பத்தியும் அதிகரிக்கும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும், தடை காலத்தில் மீன்பிடி அளவு குறைவதால் சந்தையில் கிடைக்கும் மீன்களுக்கு நல்ல விலையும் கிடைக்கிறது. இந்த இடைவேளையை பயன்படுத்தி மீனவர்கள் தங்களது எந்திரப் படகுகள், வலைகள் மற்றும் மீன்பிடி உபகரணங்களை பழுதுபார்த்து அடுத்த பருவத்திற்குத் தயார்படுத்துவது வழக்கமாக உள்ளது. கடல் வளங்களையும், மீனவர்களின் வாழ்வாதாரத்தையும் ஒருசேர பாதுகாக்கும் முக்கிய நடவடிக்கையாக இந்த மீன்பிடித் தடை கருதப்படுகிறது.
