தமிழக முதலமைச்சர் விஜய்க்கு முன்னாள் சபாநாயகர் அப்பாவு பல்வேறு கேள்விகளை முன் வைத்துள்ளார்.

தமிழக முதலமைச்சரும் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) கட்சியின் நிறுவனருமான விஜய், தனது அரசியல் பயணத்தின் தொடக்கம் முதலே சாதி, மத அடிப்படையிலான பிரிவினை அரசியலை கடுமையாக எதிர்த்து வருகிறார். இது அவரது கட்சியின் மையக் கொள்கையாகவும் அமைந்துள்ளது. 2024 பிப்ரவரியில் அரசியலுக்கு வருவதாக அறிவித்தபோதே இந்த உறுதியான நிலைப்பாட்டை அவர் தெளிவாக வெளிப்படுத்தினார்.

தவெக கட்சியை தொடங்கியபோது வெளியிட்ட அறிக்கையில் விஜய், “தற்போதைய அரசியல் சூழலில் நமது ஒற்றுமைக்கும் முன்னேற்றத்துக்கும் பெரும் தடையாக இருப்பது நிர்வாகக் கோளாறுகள் மற்றும் ஊழல் அரசியல். மற்றொன்று, சாதி மற்றும் மத அடிப்படையில் மக்களைப் பிரிக்கும் பிரிவினை அரசியல்” என்று சுட்டிக்காட்டினார். தமிழக மக்கள் ஊழலற்ற, சாதி-மதமற்ற, தொலைநோக்கு பார்வை கொண்ட நிர்வாகத்தை எதிர்பார்ப்பதாகவும் அவர் வலியுறுத்தினார். கட்சியின் அடிப்படை கொள்கைகள் திருக்குறளின் புகழ்பெற்ற வரியான “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்பதை அடிப்படையாகக் கொண்டவை என்பதை அவர் திரும்பத் திரும்ப நினைவூட்டி வருகிறார்.

இந்தச் சூழலில், முன்னாள் சட்டமன்ற சபாநாயகர் அப்பாவு முதலமைச்சர் விஜய்க்கு கடும் கேள்விகளை எழுப்பியுள்ளார். மயிலாப்பூர் மற்றும் ஸ்ரீரங்கம் தொகுதிகளில் தவெக வேட்பாளர்கள் யார் என்பதைச் சுட்டிக்காட்டிய அப்பாவு, “சாதி, மதம் ஒழிக்கப்பட்டுவிட்டதாக தம்பட்டம் அடிக்கும் முதல்வரே, இந்தத் தொகுதிகளில் சாதி-மதம் இல்லையா?” என்று கேட்டார். மேலும், திருச்சி கிழக்கு தொகுதியில் விஜய் தானே போட்டியிட்டதையும் சுட்டிக்காட்டி, “இதில் மதம் இல்லையா?” என்று கேள்வி எழுப்பினார்.

தமிழ்நாடு முழுவதும் தேர்ந்தெடுக்கப்பட்ட வேட்பாளர்களின் பட்டியலைப் பார்த்தாலே சாதி, மத அம்சங்கள் துளிர்விட்டு செழித்து வளர்வது தெளிவாகத் தெரிகிறது என்றும் அப்பாவு விமர்சித்தார். மேலும், முதலமைச்சர் பொறுப்பேற்ற ஆறே நாட்களில், எம்.ஜி.ஆர். தொடங்கிய கட்சியை ‘புஷ்பா’ பட பாணியில் சோபா செட் மூலம் தன்வசப்படுத்தியதாகக் குற்றம் சாட்டினார் அப்பாவு. அந்தக் கட்சியை உடைத்து 25 சட்டமன்ற உறுப்பினர்களை தங்களுக்கு சாதகமாக வாக்களிக்க வைத்த செயலை “ஜனநாயக படுகொலை” என்று வன்மையாகக் கண்டித்தார்.

“இதுதான் ஊழல் ஒழிப்பா? தூய எண்ணம் கொண்ட முதல்வர் செய்யும் செயலா?” என்று தொடர்ச்சியான கேள்விகளை முன்வைத்தார். இந்த விமர்சனங்கள் தமிழக அரசியல் களத்தில் புதிய விவாதங்களை ஏற்படுத்தியுள்ளன. விஜயின் ‘சாதி-மதமற்ற அரசியல்’ என்ற முழக்கம் நடைமுறையில் எந்த அளவுக்கு வெற்றி பெறும் என்பதை மக்களே தீர்மானிக்க வேண்டும் என்பது எதிர்க்கட்சிகளின் வாதம்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version