ஆட்சி என்றால் தனக்கு, அதிகாரம் என்றால் தன் குடும்பத்திற்கு என்று சுயநலத்தோடு செயல்படும் தீய சக்தி நாங்கள் அல்ல” என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை தமிழக வெற்றிக் கழகத்தின் ஐடி விங் மிகக் கடுமையாக விமர்சித்துள்ளது.
இதுதொடர்பாக தமிழக வெற்றிக் கழகத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள பதிவில், “மக்களின் பேராதரவோடு தனிப்பெரும் கட்சியாக நாங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளோம். ஜனநாயகச் சக்திகளின் துணையோடு, மனசாட்சி உள்ள மக்களாட்சி அமைக்கப்பட்டுள்ளது. எங்களுக்குத் துணையாக நிற்கும் ஜனநாயக சக்திகளை மதித்து, அவர்களுக்கு முழு மனதுடன் ஆட்சியில் பங்கையும், அதிகாரப் பகிர்வையும் நாங்கள்தான் வழங்கியுள்ளோம்” என்று தவெக குறிப்பிட்டுள்ளது.
ஆட்சி என்றால் தனக்கு மட்டுமே, அதிகாரம் என்றால் தன் குடும்பத்திற்கு மட்டுமே என்று சிலர் இருக்கிறார்கள். ஆனால் நாங்கள் அப்படியல்ல, கூட்டணிக் கட்சிகளுக்கும் சம உரிமை கொடுத்துள்ளோம். கூட்டணி என்ற பெயரில் உடன் இருக்கும் கட்சிகளின் மீது சவாரி செய்து, சுயநல அரசியல் ஆதாயங்களை மட்டும் தேடும் தீய சக்தி நாங்கள் அல்ல. “கூட்டணியை நாங்கள்தான் அனுப்பி வைத்தோம்” என்று வெளியில் பெருந்தன்மை பேசுவது போல நடித்துவிட்டு, அவர்களை ஏக வசனத்தில் பேசுவது எந்த விதத்தில் நியாயம் ஸ்டாலின் சார்?
ஆட்சிக் கட்டில் பற்றிய கனவிலேயே தூங்கும் உங்களைத் தொட்டிலில் போட்டு, புட்டிப்பால் கொடுத்து மேலும் தூங்க வைப்பது போல, உங்களைச் சுற்றி இருப்பவர்கள் ஏமாற்றுவதை அறியாமல் நீங்கள் இருக்கிறீர்கள். இப்படியே இருந்தால் கொளத்தூரை இழந்தது போல, கோட்டையை இழந்தது போல, மொத்தத்தையும் நீங்கள் இழக்கப் போவது உறுதி. உங்கள் கொத்தடிமைக் கூட்டமே உங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் ஸ்டாலின் சார், இது உறுதி என்று பதிவிட்டுள்ளது.
