பொதுவாக டிசம்பர் மாதம் என்றாலே சென்னைவாசிகளுக்கு ஒரு மரண பீதி ஏற்படும். ஏனெனில் அப்போது தான் புயல், கடுமையான மழை என பெய்து, சென்னையே வெள்ளக் காடாக காட்சியளிக்கும். ஆனால் கடந்தாண்டு புயல், கனமழை வரவில்லை. ஒருவழியாக மாதம் முடியப் போகிறது எந்த அசாம்பாவிதமும் நடைபெறவில்லை என மக்கள் நிம்மதி பெருமூச்சு விடும் முன், டிசம்பர் 23-ம் தேதி நடந்த சம்பவம் பேரதிர்ச்சியை கொடுத்தது சென்னை வாசிகளுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழ்நாட்டிற்கும் தான்…
2024 டிசம்பர் 23-ம் தேதி சென்னை அண்ணா பல்கலைகழகத்தில் மாணவி ஒருவர் வெளி நபரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பேரலைகளை ஏற்படுத்தியது. அன்றைய தினம் இரவு உணவிற்கு பிறகு அம்மாணவி தனது நண்பருடன் பேசிக் கொண்டிருந்த போது, அங்கு வந்த மர்ம நபர் ஒருவர், மாணவியின் நண்பரை மிரட்டி தாக்கியுள்ளார். அத்தோடு தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக, பாதிக்கப்பட்ட பெண் மறுநாள் (24.12.2024) கோட்டூர்புரம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.
இது தொடர்பாக 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, அந்த நேரத்தில் அப்பகுதியில் உள்ள செல்போன் டவரில் பதிவான எண்களை வைத்து விசாரணை நடத்தியுள்ளனர். அதன் அடிப்படையில் தன்னை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்திய நபரை மாணவி அடையாளம் காட்டினார். அதனடிப்படையில் டிசம்பர் 25-ம் தேதியன்று 37-வயதான ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டார். விசாரணையில் அவர் பல்கலைகழகம் அருகே நடைபாதையில் பிரியாணி கடை வைத்து வியாபாரம் செய்து வருபவர் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து அவர் சைதாப்பேட்டை மாஜிஸ்திரேட் முன்னிலையில் ஞானசேகரன் ஆஜர்படுத்தப்பட்டு 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் எடுக்கப்பட்டார்.
அதற்கு அடுத்தநாள் அதாவது டிசம்பர் 26-ம் தேதியன்று காலை, மாணவி அளித்த புகார் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கை பொதுவெளியில் வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. மாணவிக்கு நடந்த அசம்பாவிதங்கள் பற்றின விரிவான தகவல்கள் மட்டுமின்றி, அவரது பெயர், தொலைப்பேசி எண், படிக்கும் பாடப்பிரிவு, முகவரி என அனைத்து தகவல்களும் வெளியானது. ஒருசில தொலைக்காட்சி நிறுவனங்கள் விதிகளை மீறி முதல் தகவல் அறிக்கையை ஒளிப்பரப்பியது.
முதல் தகவல் அறிக்கை வெளியானது தொடர்பாக விசாரணை நடத்துமாறு அன்றைய பாஜக மாநிலத் தலைவராக இருந்த அண்ணாமலை, தேசிய மகளிர் ஆணையத்திற்கு கடிதம் ஒன்றை எழுதினார். அதற்கு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, “பாதிக்கப்பட்ட பெண்ணை முடக்க வேண்டுமென்று அரசு முயலவில்லை. அவர் மிகவும் துணிச்சலோடு முன்வந்து, அரசு மீது நம்பிக்கை வைத்துப் புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் நடவடிக்கையும் எடுக்கப்பட்டது,” என்றார்.
”எஃப்.ஐ.ஆர் வெளியானதற்கு தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இருக்கலாம், அது வெளியானது தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது” என்று சென்னை காவல் ஆணையர் அருண் தெரிவித்தார். இந்த விவகாரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விளக்கம் கேட்டு தமிழ்நாடு காவல்துறைக்கு தேசிய மகளிர் ஆணையம் டிசம்பர் 28-ஆம் தேதியன்று நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதோடு, உண்மை கண்டறியும் குழு ஒன்றும் அமைக்கப்பட்டது.
இதற்கிடையில் மாணவிக்கு நீதி கிடைக்க வேண்டுமென இந்திய மாணவர் சங்கத்தினர், அதிமுகவினர் என பலரும் பலகட்ட போராட்டங்களை நடத்தினர். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரன் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உட்பட திமுக அமைச்சர்கள், நிர்வாகிகளுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் வெளியானதால், அவர் திமுக நிர்வாகி தான் என எதிர்க்கட்சிகள் கூச்சலிட ஆரம்பித்தனர். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ரகுபதி, ”ஞானசேகரன் திமுகவில் அடிப்படை உறுப்பினர் கூட இல்லை” என விளக்கமளித்தார்.
அதேப் போல செய்தியாளர்களை சந்தித்த சென்னை காவல் ஆணையர் அருண், குற்றவாளி எந்தக் கட்சியை சேர்ந்தவராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். ஞானசேகரன் மீது திருட்டு உட்பட 20-வழக்குகள் உள்ளதாகவும், 2019-ம் ஆண்டு முதல் அவர் மீது எந்த வழக்கும் பதிவாகவில்லை எனவும் தெரிவித்தார். இந்த வழக்கை சிபிஐ-க்கு மாற்றக் கோரி அதிமுக, பாஜக உட்பட பல கட்சிகளை சேர்ந்தோர் பொதுநல வழக்கு தாக்கல் செய்தனர். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள், டிசம்பர் 27ஆம் தேதி “வழக்கு விசாரணையில் இருக்கும்போதே காவல் ஆணையர் எப்படி கைதானவர்தான் குற்றவாளி என்ற முடிவுக்கு வந்தார்?” என்று கேள்வியெழுப்பினர்.
பெண்கள் ஆண்களுடன் பேசக்கூடாது, மாணவி அங்கு சென்றிருக்ககூடாது என்று கூறக் கூடாது. காதல் என்பது பெண்களின் தனிப்பட்ட சுதந்திரம்,” எனக் கூறினர். எஃப்.ஐ.ஆர் வெளியானது குறித்து விரிவான அறிக்கையைத் தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.மறுநாள்(டிசம்பர் 28) விசாரணையின்போது, எஃப்.ஐ.ஆர் வெளியானது குறித்து விளக்கமளித்த அரசுத்தரப்பு வழக்கறிஞர், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக வெளியாகிவிட்டதாக விளக்கமளித்தார். அதேவேளையில், இந்த விவகாரத்தில் 14 பேர் மீது விசாரணை நடப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.
அண்ணா பல்கலைக்கழகம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “பாதிக்கப்பட்ட மாணவிக்கு ஆதரவாக பல்கலைக்கழக நிர்வாகம் உள்ளது. 189 ஏக்கர் பரப்பிலான வளாகத்தில் 8 வழிகள் உள்ளன. வளாகத்தில் 988 கேமராக்கள் உள்ளன. அதில் 849 செயல்படுகின்றன. விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கப்பட்டு வருகிறது,” என்று தெரிவித்தார். இறுதியாக, மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கை விசாரிப்பதற்கு மூன்று பெண் ஐ.பி.எஸ் அதிகாரிகள் கொண்ட சிறப்பு விசாரணைக் குழு ஒன்றை அமைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். அதோடு, மாணவிக்கு இடைக்கால இழப்பீடாக ரூ.25 லட்சம் வழங்குமாறு மாநில அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
தொடர்ந்து அவர் மீது நில அபகரிப்பு உள்ளிட்ட பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அதற்கான விசாரணைகளும் நடைபெற்று வந்தது. இதற்கிடையில் நீதிமன்றம் அமைத்த சிறப்பு புலனாய்வுக்குழு அதிகாரிகள் குற்றப்பத்திரிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். சென்னையில் உள்ள மகளிர் நீதிமன்றத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் விசாரணை தொடங்கியது. கடந்த ஏப்ரல் 23-ந்தேதி சாட்சி விசாரணை தினந்தோறும் என்ற அடிப்படையில் நடந்தது. பாதிக்கப்பட்ட மாணவி உள்பட 29 பேர் சாட்சியம் அளித்தனர். 75 சான்று ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டு உள்ளன.
அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், தீர்ப்பு இன்று(28.05.2025) வழங்கப்படும் என நீதிபதி ராஜலட்சுமி கடந்தவாரம் அறிவித்தார். அதன்படி ஞானசேகரன் மீது சுமத்தப்பட்ட 11 குற்றச்சாட்டுகளும் நிரூபணமாகி உள்ளதாக நீதிபதி தனது தீர்ப்பில் தெரிவித்தார்.மேலும் ஞானசேகரனுக்கான தண்டனை வி வரங்கள் ஜூன் 2-ம் தேதி அறிவிக்கப்பட்டும் என்றும், தண்டனை விவரம் வெளியாகும் வரை அவரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
குற்றவாளி என்ற தீர்ப்பு வழங்கப்பட்ட போது, ஞானசேகரன் கதறி அழுததாக கூறப்படுகிறது. முன்னதாக நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது, ஞானசேகரன் கூறுகையில், “என் அப்பா இறந்துவிட்டார். நிறைய கடன் உள்ளது. அம்மாவையும், சகோதரியையும், மகளையும் கவனித்துக் கொள்ள வேண்டிய கடமை எனக்கு உள்ளது. எனவே குறைந்தபட்ச தண்டனை வழங்கப்பட வேண்டும். ன் வங்கி கணக்கு முடக்கத்தையும் நீக்க வேண்டும்” என்று கோரிக்கை விடுத்தார்.
ஆனால் அரசு தரப்பிலோ, குற்றவாளிக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும், இரக்கம் காட்டக் கூடாது என வாதிடப்பட்டது. தண்டனைக் குறைப்பு இல்லாமல் ஆயுள் தண்டனை விதிக்கும் சட்டப்பிரிவுகள் உள்ளதா? என நீதிபதி கேள்வி எழுப்பிய நிலையில், “பல்கலைக்கழக வளாகத்திற்குள் நுழைந்து காட்டு மிராண்டி தனமான குற்றம் புரிந்துள்ளார் ஞானசேகரன், அரிதிலும் அரிதான வழக்கு என்பதால் அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும்” என்று அரசு தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
நீதிமன்ற திர்ப்பை தொடர்ந்து ஞானசேகரன் மீண்டும் புழல் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.