தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அடுத்துள்ள ஆறுமுகமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த கவின், சென்னையில் தனியார் சாப்ட்வேர் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இவர் தனது பள்ளிக் கால தோழி சுபாஷினியை பல ஆண்டுகளாக காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதனிடையே விடுமுறையில் ஊருக்கு வந்த கவின் தனது தாத்தாவை சிகிச்சைக்காக கடந்த ஆண்டு ஜூலை 27ஆம் தேதி பாளையங்கோட்டைக்கு அழைத்துச் சென்றார். கவின் அங்கு வந்திருப்பதை அறிந்த காதலி சுபாஷினியின் தம்பி சுர்ஜித், அவரிடம் பேசுவது போல அழைத்துச் சென்று அரிவாளால் வெட்டிக் கொடூரமாக கொலை செய்துள்ளார்.
கவின் ஆணவக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தை உலுக்கியது. இதுதொடர்பாக உடனடியாக சுர்ஜித்தை கைது செய்த காவல் துறையினர் அவர் மீது கொலை, வன்கொடுமை உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அவர் மீது குண்டர் சட்டமும் பாய்ந்துள்ளது. சுர்ஜித்தின் தந்தை, தாய் இருவரும் சப் இன்ஸ்பெக்டர்களாக பணியாற்றும் நிலையில், அவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். தந்தை சரவணன் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறார்.
இதுதொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. அதேசமயம் ஆணவக் கொலை செய்யப்பட்ட கவினின் குடும்பத்திற்கு வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் உரிய இழப்பீடு வழங்க வேண்டும். அரசு வேலை மற்றும் நிலம் வழங்க வேண்டும். புதிய வீடும் கட்டித் தர வேண்டும் என்று பல்வேறு கோரிக்கைகளை திருமாவள்வன் வலியுறுத்தி வந்தார்.
இந்தநிலையில், கவினின் தம்பி பிரவீனுக்கு, அரசுத் துறையான சிப்காட்டில் (SIPCOT) உதவி மேலாளர் பணியிடத்திற்கான நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது. வன்கொடுமைத் தடுப்புச் சட்ட வழக்குப் பதிவின் அடிப்படையில், தமிழக வரலாற்றிலேயே தகுதிக்கேற்ப ‘உதவி மேலாளர்’ போன்ற உயர் பதவி வழங்கப்பட்டிருப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
https://x.com/thirumaofficial/status/2058696399680909771
இவ்விவகாரம் தொடர்பாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தனது எக்ஸ் தள பக்கத்தில் நெகிழ்ச்சியுடன் தகவல் பகிர்ந்துள்ளார். “நெல்லை மாவட்டத்தில் ஆணவப் படுகொலை செய்யப்பட்ட தம்பி கவினின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கப்பட்டுள்ளது. அவரது தம்பி பிரவீன், சிப்காட் நிறுவனத்தில் உதவி மேலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அரசு பணி நியமன ஆணையை என்னிடம் காண்பித்து, கவினின் குடும்பத்தினர் தங்களது நன்றியினைத் தெரிவித்துக் கொண்டனர் என்று பதிவிட்டுள்ளார்.
