72-வது தேசிய திரைப்பட விருதுகளில் ‘அமரன்’ திரைப்படத்திற்காக சிறந்த பின்னணி இசையமைப்பாளர் விருதை வென்ற இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார், இந்த விருதை பெறுவது மிகப்பெரிய ஆசீர்வாதம் என தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “72-வது தேசிய திரைப்பட விருதுகளில் ‘அமரன்’ திரைப்படத்திற்காக சிறந்த இசையமைப்பாளர் (பின்னணி இசை) விருதைப் பெற்றிருப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியையும் பணிவையும் அளிக்கிறது.

மூன்றாவது முறையாக இந்த உயரிய தேசிய விருதைப் பெறுவது இறைவனின் பேரருளாக கருதுகிறேன். இந்த அங்கீகாரத்தை வழங்கிய நடுவர் குழுவிற்கும், தேர்வுக் குழுவிற்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், “‘அமரன்’ திரைப்படத்தில் பணியாற்றும் வாய்ப்பை வழங்கிய தயாரிப்பாளர் கமல்ஹாசனுக்கும், என் மீது நம்பிக்கை வைத்த இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமிக்கும் நன்றி.

நடிகர்கள் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி மற்றும் படக்குழுவினருடன் இணைந்து பணியாற்றியது பெருமைக்குரியது. குறிப்பாக, இந்த இசை உருவாக முக்கிய பங்காற்றிய ஒலிப்பொறியாளர் ஜெஹோவாசனுக்கு எனது சிறப்பு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.

தொடர்ந்து, “எனது குடும்பத்தினர், இசைக் கலைஞர்கள், தொழில்நுட்பக் குழுவினர், நண்பர்கள் மற்றும் என் பயணத்தில் என்னுடன் துணைநின்ற அனைவருக்கும் இந்த விருது சமர்ப்பணம்.

எல்லாவற்றிற்கும் மேலாக, எப்போதும் எனக்கு அன்பும் ஆதரவும் அளித்து வரும் ரசிகர்களுக்கு நான் என்றும் கடமைப் பட்டிருக்கிறேன். நான் உருவாக்கும் ஒவ்வொரு இசைக் குறிப்பும் உங்களுக்கானதே. இந்த தேசிய விருது எனக்கு மட்டுமல்ல, என் ரசிகர்கள் ஒவ்வொருவருக்கும் சொந்தமானது” என ஜி.வி. பிரகாஷ் குமார் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version