அமெரிக்க வாஷிங்டனுடனான மோதல் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், ஈரான் தனது எண்ணெய் ஏற்றுமதியைத் தடுக்க முயன்றால் பிராந்தியத்தில் உள்ள எந்த நாடும் கச்சா எண்ணெய் விற்பனை செய்ய முடியாது என்று கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது. ஈரானிய நாடாளுமன்ற சபாநாயகரும், அந்நாட்டின் முக்கிய பேச்சுவார்த்தையாளருமான முகமது பாகர் காலிபாஃப் இந்த முக்கிய அறிக்கையை தனது எக்ஸ் (முன்பு ட்விட்டர்) பக்கத்தில் வெளியிட்டார்.

“இந்தப் போரின் நிலைப்பாடு மிகத் தெளிவானது – ஒன்று அனைத்தும் அல்லது எதுவுமில்லை. நாங்கள் எண்ணெய் விற்க முடியாத சூழலில், இப்பிராந்தியத்தில் வேறு எந்த நாடும் விற்க முடியாது. ஈரானின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் இல்லாவிட்டால், எந்த உள்கட்டமைப்பும் பாதுகாப்பாக இருக்காது. அமெரிக்கப் படைகள் இல்லாதபோதுதான் ஹார்முஸ் நீரிணை பாதுகாப்பானதாக இருக்கும். அந்த நீரிணையின் நிலைமை மீண்டும் போருக்கு முந்தைய அமைதியான நிலைக்குத் திரும்பாது என்பதை நாங்கள் பலமுறை தெரிவித்துள்ளோம்” என்று அவர் தெரிவித்தார்.

இந்த எச்சரிக்கை, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் விடுத்த எச்சரிக்கைக்கு சில மணி நேரங்களுக்குப் பிறகு வந்துள்ளது. ஹார்முஸ் ஜலசந்தியைக் கடக்கும் வர்த்தகக் கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தினால், ஈரானியப் பாலங்கள் அல்லது மின் உற்பத்தி நிலையங்கள் மீது அமெரிக்கா பதிலடி கொடுக்கும் என்று ட்ரம்ப் அறிவித்திருந்தார்.

உலக கச்சா எண்ணெய் வர்த்தகத்தில் முக்கிய பங்கு வகிக்கும் ஹார்முஸ் நீரிணை வழியாக தினசரி ஏறக்குறைய 2 கோடி பீப்பாய் எண்ணெய் ஏற்றுமதி செய்யப்படுகிறது. ஈரான் இந்த நீரிணையைத் தனது முக்கிய உத்தியாகப் பயன்படுத்தி வருகிறது. சமீபகால போர் பதற்றத்தால் சர்வதேச எண்ணெய் விலை ஏற்கெனவே உயர்ந்துள்ளது. ஈரான் தனது அணுசக்தி திட்டம் மற்றும் பிராந்திய செல்வாக்கு தொடர்பான பிரச்சினைகளில் அமெரிக்காவுடன் நீண்டகாலமாக மோதலில் உள்ளது.

இந்த நிலையில், ஈரானின் எச்சரிக்கை பிராந்திய நாடுகள் மற்றும் உலக சந்தையில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. வல்லுநர்கள், இது எண்ணெய் சந்தையில் பெரும் ஏற்ற இறக்கத்தை ஏற்படுத்தலாம் என்று எச்சரிக்கின்றனர்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version