போலீசாரால் தேடப்படும் நிலையில் அமெரிக்காவில் தலைமறைவாக வாழும் சர்ச்சைக்குரிய ஆன்மிகவாதி நித்யானந்தா, தனது ‘கைலாசா’ என்று அழைக்கும் தன்னிச்சை நாட்டின் பிரதிநிதிகள் தமிழ்நாடு அரசின் அமைச்சர்களை சந்தித்ததாகக் கூறியுள்ளார். இந்தப் பதிவு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 16-ம் தேதி எக்ஸ் (ட்விட்டர்) தளத்தில் நித்யானந்தா வெளியிட்ட பதிவில், கைலாசா நாட்டின் பிரதிநிதிகள் சென்னை தலைமைச் செயலகத்தில் தவெக அமைச்சர்களான லோகேஷ், ஸ்ரீநாத் மற்றும் வன்னியரசு ஆகியோரை சந்தித்து ராஜாங்க உறவுகள் குறித்து விவாதித்ததாகக் குறிப்பிட்டார். அந்த சந்திப்பின்போது, நித்யானந்தா எழுதிய ‘யுனைடெட் ஸ்டேட்ஸ் ஆப் கைலாசா’ மற்றும் ‘கைலாசாவின் வரலாறு’ ஆகிய புத்தகங்களை அமைச்சர்களுக்கு பரிசளித்ததாகவும், இந்த நூல்கள் சனாதன தர்மத்தை மீட்டெடுப்பதன் அவசியத்தை வலியுறுத்துவதாகவும் அவர் தெரிவித்தார்.

சந்திப்பின் புகைப்படங்களையும் அவர் பகிர்ந்துள்ளார். எனினும், தலைமைச் செயலக வட்டாரங்கள் இந்தக் கூற்றை முற்றிலும் மறுத்துள்ளன. “எந்தவித அரசாங்க ரீதியான அல்லது ராஜாங்க சந்திப்பும் நடைபெறவில்லை. தினசரி அமைச்சர்களை மனு கொடுக்க வரும் பலரில் ஒரு குழுவினர்தான் இவர்கள். புத்தகத்தை கொடுத்து புகைப்படம் எடுத்துக்கொண்டு சென்றிருக்கிறார்கள். அதற்கு மேல் எந்தப் பேச்சுவார்த்தையும் இல்லை. நித்யானந்தா வெளியிட்ட தகவல் தவறானது” என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தமிழக அரசியலில் கவனத்தை ஈர்த்துள்ளது. கடந்த மே மாதம் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) குறிப்பிடத்தக்க வெற்றி பெற்ற பின்னர், அக்கட்சித் தலைவர் நடிகர் விஜய்க்கு நித்யானந்தா வாழ்த்து தெரிவித்திருந்தார். அந்தச் சூழலில் இந்தப் புதிய சர்ச்சை எழுந்துள்ளது மேலும் கவனத்தை ஈர்க்கிறது.

நித்யானந்தா மீது பல்வேறு பாலியல் புகார்கள், நிதி மோசடி உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. இத்தகைய பின்னணியில் அவர் தனது ‘கைலாசா’ என்ற திட்டத்தை முன்னெடுத்து வருவது பலரது விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது. தமிழ்நாடு அரசு இந்த விவகாரத்தில் தெளிவான நிலைப்பாட்டை வெளியிட வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version