காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் திருக்கோவிலில் நடைபெற்று வரும் வைகாசி பிரம்மோற்சவத்தின் போது, வடகலை மற்றும் தென்கலை பிரிவினரிடையே ஏற்பட்ட வாக்குவாதம் தள்ளுமுள்ளுவாக மாறியதால் பரபரப்பு ஏற்பட்டது.
உலகப் புகழ்பெற்ற ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோயிலில் நடைபெற்று வரும் வைகாசி பிரம்மோற்சவம் சிறப்பாக நடைபெற்று வரும் நிலையில், நான்காம் நாள் உற்சவத்தின்போது தென்கலை மற்றும் வடகலை ஐயங்கார்கள் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு வாக்குவாதமாக மாறி, தள்ளுமுள்ளு சம்பவம் ஏற்பட்டது. இதனால் பக்தர்கள் பெரும் அதிருப்தி அடைந்தனர். மே 28ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய இந்த பிரம்மோற்சவம், வரதராஜ பெருமாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.
ஒவ்வொரு நாளும் கங்கைகொண்டான் மண்டபத்தில் சுவாமி எழுந்தருளிய பின்னர் சிறப்பு பூஜைகள் நடைபெற்று, பின்னர் ராஜவீதிகளில் வீதியுலா நடைபெறுகிறது. இந்த உற்சவ காலங்களில் பாரம்பரிய மரபுகளின்படி, தென்கலை பிரிவினர் சுவாமியின் முன்புறம் திவ்ய பிரபந்தம் பாடிச் செல்லவும், வடகலை பிரிவினர் பின்புறம் வேத பாராயணம் செய்யவும் நீதிமன்ற வழிகாட்டுதல்கள் உள்ளன. நான்காம் நாளில், சந்திரபிரபை வாகனத்தில் ஸ்ரீதேவி மற்றும் பூதேவி சமேதராக வரதராஜ பெருமாள் எழுந்தருளிய வீதியுலா பக்தர்களை மிகவும் கவர்ந்தது. ஆனால், கங்கைகொண்டான் மண்டபத்தில் சுவாமி எழுந்தருளியிருந்தபோது, திவ்ய பிரபந்த கோஷ்டியினர் மற்றும் வேத பாராயணக் குழுவினரிடையே கோஷ்டி மரியாதை, பாடல் வரிசை மற்றும் உற்சவ நடைமுறைகள் தொடர்பாக கருத்து வேறுபாடு எழுந்தது.
வரதராஜ பெருமாள் கோயில் பிரம்மோற்சவம் போன்ற மிக முக்கியமான மத நிகழ்வுகள் பக்தி நிறைந்த அமைதியான சூழ்நிலையில் நடைபெற வேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பு. ஆனால், இம்மாதிரியான சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் தடுக்க சம்பந்தப்பட்ட அமைப்புகள் மற்றும் காவல்துறை தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்தப் பிரம்மோற்சவம் இன்னும் சில நாட்கள் தொடரும் என்பதால், மீதமுள்ள நாட்களில் அமைதியும் பக்தியும் நிலவும் வகையில் அதிகாரிகள் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை வலுப்படுத்த வேண்டும் என்பது பக்தர்களின் ஒருமித்த குரலாக உள்ளது.
